கீழடி அருங்காட்சியகத் திறப்பு விழாவில் தமிழக முதல்வருடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் 
வாழ்வியல்

கீழடியிலும் துள்ளி குதிக்கிறது சிந்துவெளி நாகரிக அடையாளமான காளை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

செய்திப்பிரிவு

சென்னை: "சிந்துவும் வைகையும் இம்மண்ணின் ஆதிப்பண்பாட்டின் தொடர்ச்சி. இந்துத்துவா சனாதானிகள் உருவாக்கும் ஆரிய - வைதீக கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது.எனவேதான் “கீழடி எங்கள் தாய்மடி”என்று உரக்கச் சொன்னோம்" என்று மதுரை எம்.பி, சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியல் சாசனத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் படம் திமிலுள்ள காளை. அது சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளம்.அதே திமிலுள்ள காளை தான் கீழடி அருங்காட்சியத்திலும் துள்ளிகுதிக்கிறது.கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட எலும்புத்துண்டுகளை பகுப்பாய்வு செய்து திமிலுள்ள காளையைஅடையாளப்படுத்தியுள்ளனர்.கீழடியில் கிடைத்துள்ள குறியீட்டு எழுத்துகள் எண்பது சதவிகிதம் சிந்துவெளி குறியீடுகளோடு பொருந்துகிறது.

சிந்துவும் வைகையும் இம்மண்ணின் ஆதிப்பண்பாட்டின் தொடர்ச்சி. இந்துத்துவா சனாதானிகள் உருவாக்கும் ஆரிய- வைதீக கட்டுக்கதைகளை அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது.எனவேதான் “கீழடி எங்கள் தாய்மடி”என்று உரக்கச் சொன்னோம். விடாது குரலெழுப்பினோம். அனைத்து தளத்திலும் அனைவருடனும் இணைந்து செயல்பட்டோம். இந்த அரசியல் செயல்பாட்டிற்காக நேற்று நடந்த கீழடி அருங்காட்சியக திறப்பு விழாவில் தமிழக முதல்வரால் சிறப்பு செய்யப்பட்டது மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கொந்தகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.80 கோடியில்அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (பிப்.5) திறந்து வைத்தார்.

அகழ் வைப்பகத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 காட்சிக் கூடங்களில், பழங்கால மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகை கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கும் தொல்பொருட்கள், பழங்காலத்திலேயே தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்று வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ள தொல்பொருட்கள், இரும்பு, நெசவு, கைவினைத்தொழில்கள், கடல் வணிகம் செய்ததற்கான தொல்பொருள் சான்றுகள், கலை சார்ந்த தொல்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

15 நிமிட ஒலி-ஒளி காட்சியகம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்து கொள்ளும் வசதி, 2 நிமிட அனிமேஷன் வீடியோ காட்சி ஆகியவையும் இந்த கூடங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT