பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது அமேசான் மழைக்காடு. இந்த காட்டுக்குள் நண்பர்களுடன் சென்ற ஜோனதன் அகோஸ்டா என்ற இளைஞர் வழி தவறி சென்ற காரணத்தால் காட்டுக்குள் தனி ஒருவராக சிக்கியுள்ளார். இந்நிலையில், சுமார் 31 நாட்களுக்கு பிறகு அண்மையில் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
30 வயதான அவர் பொலிவியா நாட்டை சேர்ந்தவர். அமேசான் காட்டுக்குள் வேட்டைக்காக கடந்த ஜனவரி மாதம் நண்பர்களுடன் அவர் சென்றுள்ளார். அப்போது ஜனவரி 25-ம் தேதி அன்று தனது வழியை தவறவிட்ட அவர் காட்டுக்குள் தன்னந்தனியாக சிக்கிக் கொண்டுள்ளார். காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் அவரது தொடர் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘மேன் vs வைல்ட்’ போலவே காட்டுக்குள் ஒவ்வொரு நொடியையும் அவர் செலவிட்டுள்ளார். மழை நீரை பருகியும், புழுக்களை உட்கொண்டும் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில், அவரை தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அண்மையில் மீட்டுள்ளனர்.
காட்டுக்குள் சுமார் 31 நாட்கள் தனி ஒருவராக அவர் இருந்தபோது பன்றியுடன் சண்டை போட்டதாகவும், புலியின் பார்வையில் இருந்து தப்ப பதுங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்.
“என்னால் இதை இன்னும் நம்ப முடியவில்லை. என்னை காட்டில் இருந்து மீட்க இத்தனை நாட்கள் தேடுதல் பணியை தொடர்வார்கள் என நான் எண்ணவே இல்லை. உயிர் வாழ வேண்டி புழுக்களையும், பூச்சிகளையும் உண்டேன். சமயங்களில் காட்டில் கிடைத்த பழங்களையும் சாப்பிட்டேன். நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் எனக்கு கிடைத்த மறு ஜென்மம் இது” என ஜோனதன் தெரிவித்துள்ளார்.
இந்த 31 நாட்களில் சுமார் 17 கிலோ உடல் எடையை அவர் இழந்துள்ளார். அதோடு அவரது கணுக்கால் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. காட்டுக்குள் தனியாக இருந்த காரணத்தால் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற காரணத்தால் அவரை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்.