சென்னை: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இன்ஃப்ளுயன்சா எச்3என்2 வைரஸ் (Influenza H3N2) பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி, லேசான இருமல் என்று இதன் பாதிப்புகள் இருக்கலாம். சில நேரங்களில் பாதிப்பு தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சலாகத் தொடங்கி தீவிர காய்ச்சலாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
தற்போது இன்ஃப்ளுயன்சா எச்3என்2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 30 சோதனை மையங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
> இந்தியாவில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் Influenza A subtype H3N2 பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
> தீவிர பாதிப்பை சந்திக்கும் (severe acute respiratory infection) 50 சதவீத நோயாளிகள் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
> மற்ற Influenza வைரஸ் துணை வகைகளை விட இந்த துணை வகை அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது
> மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவர்களில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சல், 86 சதவீதம் பேருக்கு இருமல், 27 சதவீதம் பேருக்கு சுவாசக் கோளாறு அறிகுறிகள் உள்ளன.
> தீவிர பாதிப்பை சந்திப்பவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. 7 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியவை; செய்யக்கூடாதவை குறித்து ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. செய்ய வேண்டியவை: கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் | கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் | கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் | இருமல், தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும் | கைகளால் கண் மற்றும் மூக்கை தொடக் கூடாது.
செய்யக் கூடாதவை: மற்றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் | பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது | மருத்துவர்கள் அனுமதி இல்லாமல் ஆன்டிபயாடிக் மருத்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
தமிழகத்தின் நிலை என்ன?: இது குறித்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறுகையில், "இந்த வைரஸ் பாதிப்பு தற்போது அதிகமாக கண்டயறிப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மாவட்டங்களில் அதிக காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் இந்தக் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.