வாழ்வியல்

110 அரங்குகள், 3 லட்சம் புத்தகங்களுடன் நெல்லை புத்தகத் திருவிழா தொடக்கம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 6-வது நெல்லை பொருநை புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தலைமை வகித்தார். எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பயிற்சி உதவி ஆட்சியர் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மு. செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்ச் 7-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

110 அரங்குகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுள்ளன. மேலும் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய உணவு. சிறுதானிய உணவு போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் கவியரங்கம், பட்டிமன்றம், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும் அனைவருக்குமான பன்முகத் தன்மை என்ற தலைப் பில் முதல் 3 நாட்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்காக 22 சிறப்பு அரங்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான பொழுது போக்கு விளையாட்டு பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

மாணவர் தேர்வு: விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் கல்வித்துறை நடத்தவுள்ள மாணவர் பட்டி மன்றத்துக்கான மாணவ, மாணவியர் தேர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மண்டலக் கல்லூரிக் கல்வித்துறை உதவி இயக்குநர் மயிலம்மாள் முன்னிலை வகித்தார்.

கல்லூரி போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ச.மகாதேவன் வரவேற்றார். ராணி அண்ணா அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றத்தில் பங்கேற்க அ.முத்துராஜ் (தூய யோவான் கல்லூரி), செ.ஸ்ரீகுட்டி (ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி) ஹாஷ்மி பாரீஷா (அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி),

ஜெனிபா பிளஸ்சி (தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரி), அ.ஜெ.ஷீலா நவ்ரோஜி (நேரு நர்சிங் கல்லூரி, வள்ளியூர்), சுல்தான் அக்ரம் பாதுஷா (சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT