ராமேசுவரம்: பாம்பன் ரயில் பாலத்தில் முதல் ரயில் இயக்கப்பட்டு இன்றுடன் 109 ஆண்டுகளாகின்றன. தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், ஏற்கெனவே உள்ள பாலத்தின் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்குப் பின்பு 2 மாதங்களாக ரயில் சேவை தொடங்கப்படாதது இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பாம்பன் ரயில் பாலப் பணிகள் 1911 ஜூனில் தொடங்கப்பட்டன. இரண்டே ஆண்டுகளில் அதாவது 1913 ஜூலையில் பணிகள் நிறை வடைந்தன. 146 தூண்களைக் கொண்ட ரயில் பாலத்தின் மொத்த நீளம் 2.1 கி.மீ. தூரம் ஆகும். இதில் கப்பல்கள் செல்ல வழி விடும் தூக்குப் பாலம் 214 அடி நீளமுள்ளது. இப்பாலம் கட்ட 4,000 டன் சிமென்ட் 1,36,000 கன சதுரஅடி களிமண் 1,800 கன சதுரஅடி மணல், 80,000 கன சதுரஅடி அளவுள்ள பெரும்பாறைகள், 2,600 டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
போட் மெயில்: பாம்பன் ரயில் பாலத்தில் முதல் ரயில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம்தேதி இயக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஆரம்ப காலக்கட்டங்களில் இந்தப் பாலம் பயன்படுத்தப்பட்டது.
இலங்கைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சென்னையிலிருந்து ராமேசுவரம் வரை ரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலைமன்னாருக்கு சிறு கப்பல் மூலம் பயணம் செய்வர். பின்னர் அங்கிருந்து மீண்டும் கொழும்புவுக்கு ரயிலில் செல்வர். இதை போட் மெயில் சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர்.
புதிய பாலம்: பாம்பன் ரயில் பாலம் கட்டடப்பட்டு நூற்றாண்டை கடந்து விட்ட நிலையில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம்ஆண்டு டிசம்பரில் அறிவித்தது. கன்னியாகுமரியில் 1.3.2019-ல் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, காணொலி மூலம் புதிய பாம்பன் ரயில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
11.8.2019-ல் பூமி பூஜையுடன் கட்டுமானப் பணி தொடங்கியது. புதிய பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடி. பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. தூண்கள்இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைய உள்ளது. தற்போது 84 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு: இதனிடையே பழைய பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதிதொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், ராமேசுவரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ராமேசுவரம் வர வேண்டிய அனைத்து ரயில்களும், மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.
கடந்த 2 மாதங்களாக ரயில் சேவை தொடங்கப்படாதது ராமேசுவரம் மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய ரயில் பாலம் 2021 செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமடைந்து விட்டது.
2023 டிசம்பருக்குள்ளாவது இப்பாலப் பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதுவரை பழைய ரயில் பாலத்தின் தூக்குப் பாலத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.