தமிழை மட்டுமே நம்பி வளர விரும்புகிறேன் என்று கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் பேசினார். கோவை நன்னெறிக் கழகம் சார்பில் ‘சிவம் 50’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி கிக்கானி பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் பட்டிமன்ற பேச்சாளர்கள் மோகனசுந்தரம், ராஜாராம் ஆகியோர் சுகி சிவத்தை பாராட்டி பேசினர். நிறைவில், சுகிசிவம் பேசியதாவது:
வாழும் காலத்திலேயே நான் மேற்கொண்டுள்ள பணிக்கு என்னை பாராட்டி கொண்டாடி மகிழ்கிறீர்கள். பாரதி ஆசைப்பட்டது போல எனக்கு நடந்துள்ளது எல்லையற்ற மகிழ்ச்சி. பணம், பதவி, புகழுக்கு ஆசைப்படுபவன் அல்ல. எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவேன். தமிழை மட்டுமே நம்பி வளர விரும்புகிறேன்.
நான் பணி வாய்ப்பு பலவற்றை நிராகரித்தபோதும் என்னை ஆசீர்வாதம் செய்த எனது தந்தைக்கும், நிரந்தரமான மாத ஊதியம் இல்லாத என் தொழிலை நம்பி என்னை திருமணம் செய்த என் மனைவிக்கும் என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
‘சிறுவன் என்று ஏமாந்தேன், நீ ஒரு சிறுத்தைக் குட்டி’ என்று முதல்வர் கருணாநிதி என்னை பாராட்டினார். அது மட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறையில் பணி வாய்ப்பு பெற உதவியும் செய்வதாக தெரிவித்தார். அன்று நான் அந்த பணியை அன்புடன் மறுத்தேன்.
இன்று கடவுளின் அருளால் இந்து சமய அறநிலையத்துறையின் ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.