இந்தூர்: ஷிஃப்ட் நேரம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு போகுமாறு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தெரிவித்து வருகிறதாம். ஊழியர்களின் ஒர்க் - லைஃப் பேலன்ஸை கருத்தில் கொண்டு இந்த முயற்சியை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளதாம். இது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அது ஊழியர்களின் நெஞ்சை சுக்குநூறாக நொறுங்க செய்துள்ள வேளையில், இந்தூரில் இயங்கி வரும் அந்நிறுவனம் ஊழியர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.
“எச்சரிக்கை!!! உங்கள் ஷிஃப்ட் நேரம் முடிந்துவிட்டது. அலுவலகத்தின் கணினி அடுத்த 10 நிமிடங்களில் ஷட்-டவுன் ஆகும். வீட்டிற்கு செல்லுங்கள்” என ஷிஃப்ட் நேரம் முடிந்த பின்பும் பணியை தொடரும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் ஒரு அலர்ட் மெசேஜ் கொடுக்கிறது. இது குறித்த பதிவுதான் லிங்க்ட்இன் தளத்தில் வைரலாகி உள்ளது.
இதனை இந்தூரில் இயங்கி வரும் சாப்ட் கிரிட் கம்யூட்டர்ஸ் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ளது. மகிழ்வான பணிச்சூழலுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக இதனை தங்கள் நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் ஹெச்.ஆர் பிரதிநிதி தன்வி சொல்லியுள்ளார். சிலர் இது குறித்து மாற்று கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இது புரொடக்டிவிட்டியை பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.