மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே காதலர் தினத்தையொட்டி அங்குள்ள காதலர் கற்களுக்கு கிராம மக்கள் மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை அருகே அதிகரை விலக்கு பகுதியில் 2 செங்குத்து கற்கள் அருகருகே தூண்கள் போன்று உள்ளன. ஒரு கல் 7 அடி, மற்றொரு கல் 5 அடி உயரம் கொண்டதாக உள்ளன. முற்காலத்தில் ஆடு, மாடு மேய்த்தபோது 2 பேர் காதல் வயப்பட்டு பெற்றோர், உறவினர் எதிர்ப்பால் இறந்து, கல்லாக மாறியதாக அப் பகுதியினர் நம்புகின்றனர்.
இதனால் வேலூர், முருகபாஞ்சான், அதிகரை, உருளி, கள்ளர் வலசை கிராம மக்கள் அந்த கற்களை இன்றும் வணங்கி வருகின்றனர். வெளியூர்களைச் சேர்ந்த காதலர்களும் தங்களது காதல் நிறைவேற இந்த கற்களை தேடி வந்து வழிபட்டுச் செல்கின்றனர். நேற்று காதலர் தினத்தையொட்டி கிராம மக்கள் மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்.
செங்குத்தாக உள்ள இந்த 2 கற்களும் பல நூறு ஆண்டுகளாக காற்று, மழையில் சேதமடையாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.