மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் கருவாடு விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், அந்தந்த வட்டாரப் பகுதியில் தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் பயன்பெறும் விதமாகவும் ‘ஒருபொருள், ஒரு நிலையம்’ என்ற விற்பனை திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது.
இதன்படி, ரயில் நிலையங்களில் சிறப்பு விற்பனை கண்காட்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில் உள்ளூர் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் ரயில் நிலையங்களில் பாரம்பரிய பொருட்களுக்கான விற்பனைக் கடைகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் ஏற்கெனவே மதுரை சுங்குடி சேலை விற்பனை அங்காடி செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து கட்டணமில்லா வருமானத்தை பெருக்கும் திட்டத்தின் கீழ், கருவாடு விற்பனை நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தை தமிழ்நாடு ஸ்டாடப் மிஷன் இயக்குநர் சிவராஜ் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
இக்கடைக்கு ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பல வகையான கருவாடு பார்சல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கிலோ ரூ. 100 முதல் விற்பதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.