வாழ்வியல்

40 ஆண்டுகளுக்கு முன்பு வரை காரங்காடிலிருந்து இலங்கைக்கு மண் பானைகள் ஏற்றுமதி: மரபு நடை பயணத்தில் தகவல்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-வது புத்தகத் திருவிழா ராஜா மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்.9 முதல் பிப்.19 வரை நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் வரலாறு, தொல்லியல், பாரம்பரிய இடங்களை அறிந்து தெரிந்துகொள்ளும் வகையில் பிப்ரவரி 4, 5 ஆகிய 2 நாட்கள் மரபு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று கல்லூரி மாணவர்களுக்காக காரங்காடு சதுப்பு நிலப்பகுதி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி கோயில்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மரபு நடை பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ராமநாதபுரத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு, உதவி ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாஜலபதி , கல்லூரி பேராசிரியர்கள் இளவரசன், பெர்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறிய தாவது: “2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடற்கரைச் சோலைகள், துறைமுகங்களின் சூழலை சங்க இலக்கியங்கள் வர்ணிக்கின்றன.பழமை மாறாமல் ஒரு கடற்கரைச் சோலையும், துறைமுகமும் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அத்தகைய சூழல் தற்போதும் காரங்காட்டில் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் சுமார் 250 கி.மீ. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பகுதிகளில் ஓடைகள், காட்டாறுகள் அதிகமாக உள்ளன. இவை கடலில் கலக்கும் இடங்களில் உள்ள உப்பங்கழிகள் மூலம் பல இயற்கையான துறைமுகங்கள் உருவாகி உள்ளன.

பழங்காலத்தில் கரையிலிருந்து பல கி.மீ. தூரத்தில் ஆழ்கடலில் நிற்கும் கப்பல்களிலிருந்து படகுகளில் சரக்குகளை ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன. இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 13, 14-ம் நூற்றாண்டு கால கல்வெட்டுகளில் தொண்டி, நானாதேசிப்பட்டினம், சுந்தர பாண்டியன்பட்டினம், முத்துராமலிங்க பட்டினம், பாசிப்பட்டினம், நீர்ப்பட்டினம் ஆகிய துறைமுகப் பட்டினங்கள் இருந்ததாக அறிய முடிகிறது.

தீர்த்தாண்டதானத்தில் உள்ள சிவன் கோயில் கல்வெட்டுகள் இவ்வூரை திட்டானம் என்றும் இங்கு வணிகக்குழுக்கள் தங்கி இருந்ததையும் குறிப்பிடுகிறது. திட்டானம் என்றால் மரக்கலம் நிறுத்தும் மேட்டுப்பகுதி என்று பொருள். இதன் அருகில் உள்ள ஊர் வட்டானம். வட்டானம் என்பது வட்ட வடிவமான மரக்கலத்தைக் குறிக்கிறது. இங்கு வட்ட வடிவமான பரிசல் கட்டும் தொழில் நடந்திருக்கலாம்.

தளி மருங்கூர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் வீரகேரளபுரமான நானதேசிப் பட்டினம் என பெயர் பெற்றிருந்தது. காரங்காடு தேவாலயத்தின் பின்புறம் உள்ள உப்பங்கழி பகுதியில் அதிகளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கு செய்யப்பட்ட மண் பானைகள் இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமேசுவரத்திலிருந்து கப்பல்களில் ஏற்றுமதி ஆகின.

மேலும் இவ்வூரில் உள்ள இயற்கையான உப்பங்கழி ஒரு சிறந்த இயற்கைத் துறைமுகமாக காட்சியளிக்கிறது. காரங்காடு கடற்கரை களிமண் பாங்கானது. இங்கு கோட்டைக்கரை ஆறு மூன்றாகப் பிரிந்து கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் இயற்கையான சதுப்பு நிலக் காடுகள் 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளன.

உப்பங்கழியின் இருபுறமும் அழகாக வளர்ந்துள்ள இக்காடுகள் கண்ணுக்கு விருந்தாகிறது. ஆழம் குறைவான இப்பகுதி அரியவகைப் பறவைகள், கடல் விலங்குகள், தாவரங்களின் இருப்பிடமாக விளங்குகிறது. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இவை சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை” இவ்வாறு வே. ராஜகுரு கூறினார்.

இந்த மரபு நடை பயணத்தில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரி, கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT