டேவிட் வார்னர் | கோப்புப்படம் 
வாழ்வியல்

பதில் ட்வீட்டுக்காக 110 நாட்கள் விடாமல் ட்வீட் போட்ட ரசிகர் - 'ஹலோ' சொல்லி அசத்திய வார்னர்

செய்திப்பிரிவு

பெங்களூரு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் பதில் ட்வீட்டுக்காக அவரை டேக் செய்து 110 நாட்கள் விடாமல் ட்வீட் போட்டுள்ளார் இந்தியாவை சேர்ந்த ரசிகர் ஒருவர். இறுதியில் அவருக்கு வார்னர் ‘ஹலோ’ சொல்லி அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரரான டேவிட் வார்னருக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவது இந்திய ரசிகர்களை மேலும் அவரை நெருக்கம் ஆக்கியது. சமயங்களில் அவரும் இந்திய ரசிகர்களுக்கு குஷி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்வார். தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஆயத்தமாகி வருகிறார். அவர் இந்தியாவில் பங்கேற்று விளையாடும் கடைசி டெஸ்ட் தொடராக இது இருக்கலாம். ஏனெனில், கடந்த நவம்பரில் ‘அடுத்த 12 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது கடைசி நாட்களாக இருக்கலாம்’ என அவரே சொல்லி இருந்தார்.

வார்னர் கிரிக்கெட் களத்தில் எந்த அளவுக்கு ஆக்டிவாக இருப்பாரோ அதே அளவுக்கு சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவரது பதிவுகள், பகிரும் ரீல்ஸ் என அனைத்தும் அமோக வரவேற்பை பெறும். இந்த நிலையில் ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ‘சமீர் பட்டா’ எனும் பெயரில் ட்விட்டர் கணக்கு வைத்துள்ள ரசிகர் ஒருவர் கடந்த செப்டம்பர் முதல் 110 ட்வீட்களை செய்துள்ளார். அந்த அனைத்து ட்வீட்டிலும் வார்னர் ரிப்ளை செய்யும் வரை இது தொடரும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த ட்வீட்களில் வார்னரின் படத்தை வைத்து அவரை டேகும் செய்துள்ளார். கடந்த 2022, செப்டம்பர் முதல் அந்த ரசிகர் இந்த ட்வீட்களை செய்து வந்துள்ளார்.

இந்த ட்வீட் விவகாரம் வார்னரின் கவனத்தை பெற்றுள்ளது. தனது பதிலுக்காக காத்திருக்கும் ரசிகரை மேற்கொண்டு காத்திருக்க செய்யாமல் ‘ஹலோ’ என வார்னர் அதற்கு ரிப்ளை கொடுத்துள்ளார். அதையடுத்து ரசிகர்கள் பலரும் இப்போது தங்களுக்கும் ரிப்ளை செய்யுமாறு சொல்லி வருகின்றனர்.

SCROLL FOR NEXT