திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற கந்தூரி விழாவில் 20 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.
திண்டுக்கல் நாகல்நகர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஜங்ஷன் பள்ளிவாசல் இணைந்துஆண்டுதோறும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி கந்தூரி விழாவை நடத்துவது வழக்கம். 6-வது ஆண்டாக கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெருமக்கள், ஜமாத்தார் பங்களிப்புடன் அரிசி, பருப்பு, காய்கறிகள் நன்கொடையாக பெற்று பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
3000 கிலோ அரிசி, 1,000 கிலோ இறைச்சி, 500 கிலா கத்தரிக்காய், 500 கிலோ நெய்யை பயன்படுத்தி பிரியாணி சமைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள நாகல் நகர், வேடபட்டி, பேகம்பூர், திருமலைசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தாங்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.