வாழ்வியல்

களை கட்டியது திருப்பூர் புத்தகத் திருவிழா

செய்திப்பிரிவு

திருப்பூர்: தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தும் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

திருப்பூர் - காங்கயம் சாலை வேலன் உணவக மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை,செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார்.

திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகர மேயர் ந.தினேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வருவாய் அலுவலர் ஜெய்பீம், பின்னல் புக் டிரஸ்ட் ஆர்.ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தாரை தப்பட்டை வாத்தியம் இசைக்க, நாட்டுப்புற கலைஞர்களின் நடனம், நாட்டுப்புறப் பாடல்களும் இடம் பெற்றன. முதல் நாளிலேயே பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் திரண்டனர்.

அரசு துறை சார்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், மகளிர் திட்டம், வேலை வாய்ப்பு, கல்வி, தோட்டக்கலை, வேளாண்மை, காவல்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த 24 அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன.

ஏடிஎம் வாகனம்: புத்தக திருவிழாவுக்கு வருவோர் வசதிக்காக நடமாடும் தானியங்கி பணம் வழங்கும் (ஏடிஎம்) வாகனம், அந்த வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம், சிற்றுண்டி அரங்குகள், கழிப்பிட வசதி என பார்வையாளர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகள் புத்தகம் வெளியிடல்: பாரதி புத்தகாலயம் சார்பில் சிறார்களுக்கான புத்தகங்கள் வெளியீடு விழா நேற்று நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த பள்ளிமாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 50 புத்தகங்களை 50 மாணவ, மாணவிகள் வெளியிட, அதனை 50 மாணவ, மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.

மாணவ, மாணவிகளுக்கான கதை சொல்லி நிகழ்ச்சி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

SCROLL FOR NEXT