திருநெல்வேலி: சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ‘கூண்டுக்குள் வானம்’ என்ற அரங்கில் சிறைவாசிகளின் மனநலனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு பொதுமக்கள் புத்தகங்களை தானமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி ஆகியோரின் வழிகாட்டுதலில் பாளையங்கோட்டையிலும் சிறைவாசிகளுக்கான புத்தக தான மையம் தொடங்கப் பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறையை அடுத்து சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையத்தில் இந்த புத்தக சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் பாளையங்கோட்டை மத்திய சிறை உதவி அலுவலர் சண்முகம், தலைமைக் காவலர் முத்துசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தொழிலதிபர்கள் மவுலானா, பீர்மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.