சென்னை: சென்னையில் நாளை (ஜன 28) மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாமுக்கு தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மூத்த குடிமக்களின் இன்றைய முக்கிய தேவை உளவியல் ரீதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டி அவர்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாமுக்கு தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முகாம் மூலம் அன்றாட வாழ்வில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்படவுள்ளது, மூத்த குடிமக்களுக்கான உடல்நல பரிசோதனைகள் செய்து பரிசோதனைக்கு பின்பு அவசியம் ஏற்பட்டால் அப்பல்லோ மருத்துவமனை மூலமாக மருத்துவ உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராதாத்ரி கண் மருத்துவமனையின் மூலமாக கண் பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு அடுத்த கட்டணமில்லா அறுவை சிகிச்சை, கண் கண்ணாடி, மருத்துவ உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. ஊட்டச்சத்து நிபுணரின் உதவியுடன் மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பான உணவு முறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
மூத்தகுடி மக்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மதிய விருந்து மற்றும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். மேலும் நிகழ்வுக்கு வருவோர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடி மகிழலாம்.
இந்நிகழ்ச்சி நாளை (ஜன.28) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறுகிறது. சென்னை கிண்டி MSME-DI வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மூத்த குடிமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.