கும்பகோணம்: வறுமையில் வாடிய நிலையிலும் உழைத்து வாழவே விருப்பம் என வாழும் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் பணி வழங்கினார்.
கும்பகோணம், கிளாரட் நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முருகன் (40). டிப்ளமோ கணினி அறிவியல் படித்துள்ள இவரது மனைவி வீரவள்ளி (37). பெற்றோர்களை எதிர்த்து, 6 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியான முருகன் மற்றும் வீரவள்ளி ஆகிய இருவருமே, 2 கால்கள் செயலிழந்த மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
இதில் முருகன் கும்பகோணத்தில் தனியார் நிறுவனத்தில் ரூ.8 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு போதுமான வருமானம் இல்லாததால், இன்று காலை 2 பேரும் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகனிடம், மாற்றுத் திறனாளியான தம்பதியினர், ''உழைத்து குடும்பத்தை நடத்த வேண்டும், யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வேண்டும், குழந்தைகளை படிக்க வேண்டும்'' என வலியுறுத்தி தன் மனைவிக்கு வேலை கேட்டார்.
அவர்களின் நிலைமை அறிந்த எம்எல்ஏ உடனடியாக தன்னுடைய மருத்துவமனையின் கணினி பிரிவில் போதுமான ஊதியத்துடன் பணியினை வழங்கினார். இதனையடுத்து மாற்றுத் திறனாளி ஆன தம்பதியினர் 2 பேரும் எம்எல்ஏவுக்கு நன்றி செலுத்தினர். பின்னர், அவர்களிடம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூடத்திற்குச் சென்று, தங்களுக்கு தேவையானவற்றை, மனுவாக வழங்குங்கள் என எம்எல்ஏ தெரிவித்தார்.