உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொரைஹட்டி கிராமத்தில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் ஜனவரி மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின்போது, சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம், கிராம மக்களின் ஆன்மிக பஜனை பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு திருவிழாவின்போது பெண்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. நுழைவு வாயில் பகுதி வரை வந்து பெண்கள் காணிக்கையை செலுத்திவிட்டு திரும்பி செல்வர். ஆண்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர்.
இக்கோயிலின் விழா நேற்று முன்தினம் (ஜன.22) தொடங்கியது. நேற்று காலை 10 மணி முதல் 3 மணி வரை ஆடல், பாடல், ஐயனை அழைத்துச் செல்லுதல், முடி இறக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது. உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். இரவு ஆன்மிக நாடகம் அரங்கேற்றப்பட்டது. திருவிழா நாளை நிறைவடைகிறது. கோயில் நிர்வாகி மாயன் கூறும்போது, ‘‘தொரைஹட்டி கிராமத்தில் தற்போது ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ள பகுதியில், எங்களது மூதாதையர்கள் தூய்மைப்படுத்தி வந்தபோது, சுயம்புலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
சிவன் சிலையுடன் கோயில் கட்டப்பட்ட வேண்டும் என்பதால், இங்கு சிவன் மற்றும் லிங்கத்துக்கு கோயில் கட்டப்பட்டது. சுயம்புலிங்கத்தை பெண்கள் பார்க்க கூடாது என ஐதீகம் உள்ளதால், கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை’’ என்றார்.