திருப்பூர்: திருப்பூரில் செயல்பட்டு வரும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த இரட்டையர்கள் ஓவியத்தில் அசத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் க.பழனிசாமி கூறும்போது, ‘‘எங்கள் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் விஷ்ணுவர்தன், விஷ்ணுபிரியன். இரட்டை சகோதரர்கள். இவர்களின் ஓவியத்திறன் கண்டு சகமாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் வியப்பில் உள்ளனர்.
ஓவியத்தில் அசாத்திய திறனுடன் வலம்வரும் இவர்கள், பல்வேறு ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து பல்வேறு நிலைகளில் பரிசுகளை குவித்து வருகின்றனர்’’ என்றார். இது தொடர்பாக இரட்டை சகோதரர்கள் கூறும்போது, ‘‘திருப்பூர் மங்கலம் சாலை பகுதியில் தாயார் மங்கையர்கரசியுடன் வசித்து வருகிறோம். எங்களது மூத்த சகோதரர் கோகுல்(18) பிளஸ் 2 படித்து வருகிறார். எங்களுக்கு சிறுவயதில் இருந்தே, ஓவியத்தின் மீது ஆர்வம் இருந்தது.
இதையறிந்த எங்கள் தாய் மங்கையர்கரசியும், பள்ளிஆசிரியர்களும், சக மாணவர்களும் ஊக்கமளித்ததால் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளோம். சமீபத்தில் விவேகானந்தரின் 160-வது பிறந்தநாளன்று பள்ளி சுவரில் அவரது ஓவியத்தை நாங்கள் தத்ரூபமாக வரைந்து, அனைவரது பார்வைக்கும் வைத்தோம். இதை அனைவரும் பாராட்டினர். தொடர்ந்து ஓவியக் கலையில் சாதிக்க விரும்புகிறோம்’’ என்றனர்.