காரைக்குடி: காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் நடைபெற்ற பழமையான கார்களின் கண்காட்சியை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
கானாடுகாத்தானில் செட்டிநாடு அரண்மனை முன்பாக மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், செட்டிநாடு புராதன (பாரம்பரிய) கார்களின் கண்காட்சி நடைபெற்றது. இதற்காக சென்னை யில் இருந்து நேற்று பழமையான கார்கள் கொண்டு வரப்பட்டன. இந்தக் கண்காட்சியில் 1886-ல் அறிமுகமான பென்ஸ் பேட்டன்ட் உள்ள காரின் மாடல் அனைவரையும் கவர்ந்தது.
இது தவிர ஆஸ்டின் ஏ-30, 1939 மாடல் எம்ஜி, 1948 மாடல் பீல்ட் மாஸ்டர், 1951 மாடல் செவர்லெட், 1956 மாடல் பிளைமவுத், 1966 மாடல் வோல்ஸ்வேகன், 1964 மாடல் ஃபியட் சூப்பர் செலக்ட் உள்ளிட்ட 1939 முதல் 1991 வரையிலான பழமையான 17 கார்கள் இடம் பெற்றிருந்தன.
இதேபோல 1974 மாடல் சுசுகி ஆர் பி 90, 1967 மாடல் எம்பி அகஸ்டா உள்ளிட்ட 5 பழமையான மோட்டார் சைக்கிள்களும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் செயலாளர் எம்.எஸ்.குகன், தலைவர் பால்ராஜ் வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.