நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கையின் ஐந்து கூறுகளை வைத்து ஒடுக்கப்பட்டோருக்கு இழைக்கப்படும் அநீதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘68,85,45 + 12 லட்சம்’ என்னும் நாடகத்தை எழுதி இயக்கி உள்ளார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.
1968-ல் தமிழ்நாட்டின் கீழ்வெண்மணியில் கூலியை உயர்த்திக் கேட்டதற்காக 44 விவசாயக் கூலித்தொழிலாளிகள் தீக்கிரையாக்கப்பட்டனர், 1979-ல் மேற்கு வங்கத்தின் மரிஜாபியில் அகதிகளாகக் குடியேறிய மக்கள் படுகொலை செய்யப்பட்டது, 1985-ல் ஆந்திரப் பிரதேசத்தின் கரமசேதுவில் தமது தண்ணீரை அசுத்தம் செய்த ஆதிக்க சாதியினரை எதிர்த்ததற்காக ஆறு பேர் கொல்லப்பட்டது ஆகிய நிகழ்வுகள், இந்தியாவில் கழிவுநீர் தொட்டிகளுக்குள் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களில் 45% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பெரும்பாலும் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த நாடகத்தின் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்திலும் உயிரிழந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் பட்டியலின மக்களே. சுதந்திர ஜனநாயக இந்தியாவிலும் அவர்களுக்கு பலவகையான அநீதிகள் இழைக்கப்படுவது குறித்த குற்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்கிறது ப்ரஸன்னா ராமஸ்வாமியின் நாடகமாக்கம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியான பி.ஆர்.அம்பேத்கரை பட்டியலின மக்களின் மீட்சிக்கான வழிகாட்டியாக ஏற்று அவருடைய கருத்துகளை உள்வாங்கி அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதன் மூலமாகவே அனைவரையும் உண்மையிலேயே சமமாக நடத்தும் சமூகத்தைக் கட்டமைக்க முடியும் எனும் விழிப்புணர்வை துளியும் பிரச்சார நெடியின்றி ஏற்படுத்துகிறது. அம்பேத்கரை நாடகத்துக்குள் கொண்டு வந்திருப்பதையும் ரசிக்க முடிகிறது.
சாக்கடைக் குழியில் இறங்கும் பட்டியலின துப்புரவுப் பணியாளர்களுக்கு இடையிலான உரையாடல்கள் அவர்களின் வாழ்க்கையையும் அவர்களை இந்தச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பதையும் மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறது. இந்தப் பகுதியை எழுதி அதில் ஒரு கதாபாத்திரமாகவும் நடித்திருக்கும் திவாகருக்கு சிறப்பு பாராட்டுகள். கீழ்வெண்மணி படுகொலை தொடர்பான காட்சிகள் அந்தக் கொடிய நிகழ்வின் வலியையும் வேதனையையும் பார்வையாளர்களுக்குக் கடத்துகின்றன. ஆனால் கீழ்வெண்மணியில் போராடும் விவசாயிகளுக்குத் துணை நின்ற தொழிற்சங்கங்கள், இடதுசாரிக் கட்சிகள் குறித்த பொத்தாம் பொதுவான சில விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாம். மூன்று முக்கியமான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான தொலைக்காட்சி விவாதக் காட்சியில் அரசியல் கட்சிகளின் போலித்தனங்களும் ஊடகங்களின் வணிக நோக்கும் பொதுமக்களின் பொறுப்பின்மையும் பகடி வழியாக உணர்த்தப்பட்டிருக்கின்றன.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன். எழுத்தாளர் கெளதம சன்னா, ரத்தன் சந்திரசேகர், திவாகர் ஆகியோரின் எழுத்துப் பங்களிப்பையும் சுகுமாரன், ரவிக்குமார் உள்ளிட்டோரின் கவிதைகளையும் நாடக வடிவத்தை சிதைக்காமல் தன்னுடைய நாடகப்பிரதிக்குள் ஒருங்கிணைத்திருக்கிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி. சில விஷயங்களைப் பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடுவது, கதாபாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் சில நேரம் அவற்றை ஏற்று நடிக்கும் கலைஞர்களுக்கிடையிலான உரையாடலாகவும் மாறுவது என நாடக மேடை, உள்ளடக்கம் சார்ந்த சுவர்களை உடைத்து கதைகூறலில் புதிய உத்திகளை இந்த நாடகத்திலும் முயன்றிருக்கிறார். பரதநாட்டியக் கலைஞரும் நடிகருமான அனிதா ரத்னம். இயக்குநர் நிகிலா கேசவன், நடிகர்கள் ரேவதி குமார், பிரசன்னா ராம்குமார் ஆகியோருடன் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த நடிகர்கள், வேறு சில இளம் நடிகர்கள் என நாடகத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் முழுமையான அர்ப்பணிப்புடன் பங்களித்திருப்பதை உணர முடிகிறது. சில இளம் நடிகர்களின்உச்சரிப்பு சில இடங்களில் கதாபாத்திரத்துக்கு பொருந்தாததாக உள்ளது. அனந்த் குமாரின் உயிரோட்டமான பின்னணி இசையும் ரேவதி குமாரின் உருக்கமான பாடலும் நடிகர்களின் நேர்த்தியான நடனமும் குருவின் ஆடம்பரமற்ற கலை இயக்கமும் சார்ல்ஸின் ஒளி வடிவமைப்பும் இந்த நாடகத்தை ஒரு சிறப்பான அனுபவமாக மாற்ற உதவியுள்ளன.
அனைவருக்கும் பொதுவான இயற்கையின் கூறுகளை சக மனிதர்கள் மீதான ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்தும் அவலநிலையை உணர்த்தி அதைத்தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆழமாகச் சிந்திக்க வைத்திருப்பதே ‘68,85,45 12லட்சம்’ நாடகத்தின் முக்கியத்துவம்.
(இந்த நாடகம் ஜனவரி 21, மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள கூத்துப்பட்டறையில் மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது.)