வாழ்வியல்

முக்கல்நாயக்கன்பட்டியில் நடந்த சாப்பாட்டு ராமன் போட்டியால் கலகலப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி அடுத்த முக்கல் நாயக்கன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘சாப்பாட்டு ராமன் போட்டி’ நடத்தப்பட்டது.

பொங்கல் விழாவையொட்டி தருமபுரி அடுத்த முக்க நாயக்கன்பட்டியில் விளையாட்டுப் போட்டிகள், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நேற்று, ‘சாப்பாட்டு ராமன் போட்டி’ என்ற பெயரில் அதிக அளவில் சாப்பிட்டு சாதனை படைப்பவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தப்பட்டது.

போட்டியின் முதல் நிகழ்வாக, சிக்கன் பிரியாணியை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் போட்டி நடந்தது. 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற இப்போட்டியில் கஜேந்திரன் என்பவர் முதல் பரிசை பெற்றார். அதைத் தொடர்ந்து, 1 கிலோ சிக்கனை குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டி நடந்தது.

இப்போட்டியிலும் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றிவேல் என்பவர் 10 நிமிடத்தில் 1 கிலோ சில்லி சிக்கனை சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். சுரேந்தர் என்ற இளைஞர் 14 நிமிடத்தில் 1 கிலோ சிக்கனை சாப்பிட்டு இரண்டாம் பரிசு பெற்றார்.

இறுதி நிகழ்வாக, அரை கிலோ ஐஸ்கிரீம் சாப்பிடும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இப்போட்டியில் ராஜ்குமார் என்பவர் 7 நிமிடத்தில் 1 கிலோ ஐஸ் கிரீமை சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். இப்போட்டியால் முக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தின் நேற்றைய பகல் பொழுது பரபரப்பாகவும், கலகலப்பாகவும் கழிந்தது.

SCROLL FOR NEXT