ஈரோடு வஉசி பூங்காவில் காணும் பொங்கலைக் கொண்டாட குவிந்த பெண்கள். 
வாழ்வியல்

ஈரோடு வஉசி பூங்காவில் பெண்கள் மட்டும் பங்கேற்ற காணும் பொங்கல் விழா

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோட்டில் காணும் பொங்கலையொட்டி, வஉசி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழாகளை கட்டியது.

ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று ஈரோடு வஉசி பூங்காவில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக, பூங்காவில் காணும் பொங்கல் விழா நடைபெறவில்லை.

பாரம்பரிய நடனம்: இந்நிலையில், இந்த ஆண்டு காணும் பொங்கலை கொண்டாட, வஉசி பூங்காவுக்குள் பெண்கள் மட்டும் நேற்று அனுமதிக்கப்பட்டனர். குடும்ப உறுப்பினர்களுடன் பூங்காவில் குவிந்த பெண்கள் வாத்தியங்களை இசைத்தும், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மி என பாரம்பரிய நடனமாடியும், பாண்டி, பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் மகிழ்ந்தனர்.

கல்லூரி மாணவியர் மற்றும் இளம்பெண்கள் உற்சாகமாக நடனமாடினர். மியூசிக்கல் சேர் போன்ற பல்வேறு போட்டிகளையும் தங்களுக்குள் நடத்தி மகிழ்ந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியதால், பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொடிவேரியில் கூட்டம்: கோபியை அடுத்த கொடிவேரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு அருவி போல் கொட்டும் நீரில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கொடிவேரியில் காணும் பொங்கல் களைகட்டியது. பவானிசாகர் அணைப் பூங்காவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பறவைகள் சரணாலயம்: காணும் பொங்கலையொட்டி நேற்று அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வெள்ளோடு சரணாலயத்துக்கு வந்தனர். இதேபோல், பவானி கூடுதுறை, பண்ணாரி அம்மன் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் உள்ளிட்டவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. பவானி கூடுதுறை, பண்ணாரி அம்மன் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் உள்ளிட்டவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது.

SCROLL FOR NEXT