தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நடுவக்கரை கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஒட்டகம், ரேஸ் குதிரை, ஜல்லிக்கட்டுக் காளை மற்றும் ஆந்திராவின் ஓங்கோல் காளை உட்பட வளர்ப்புப் பிராணிகளுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் விழா நடைபெறுகிறது.
உமாமகேஸ்வரபுரம் ஊராட்சி நடுவக்கரை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பண்ணையில் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இதில் ஜல்லிக்கட்டுக்கு செல்லும் காங்கேயம் கருப்பு காளை, ஆந்திரா மாநிலத்தில் புகழ்பெற்ற ஓங்கோல் காளை, ஒட்டகம், ரேஸ் குதிரை, அரிய வகை போனிடைல் குதிரை, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், எருமைகள், கறவை மாடுகள், கலப்பின பசுக்கள், பல்வேறு மாநிலங்களில் புகழ்பெற்ற பசு மாடுகள் மற்றும் கன்றுகள், வான்கோழி உள்ளிட்ட பலவகை கோழிகள் போன்ற வளர்ப்பின கால்நடைகளுக்கு சந்தனம் குங்குமம் அலங்காரம் செய்து, மாவிலை, நெல்லி இலை, வேப்பிலை, நெட்டி மாலை அணிவிக்கப்பட்டு பூஜை செய்தனர்.
பின்னர் கற்பூரம், சாம்பிராணி தீபஆராத்தி காண்பித்து பொங்கல் வைத்து வழிபட்டு, பொங்கல் மற்றும் பழ வகைகளை உணவாக குடும்பத்தினர் வழங்கினர்.