'துணிவு' பட அஜித் போஸ்டருடன் வினோத் 
வாழ்வியல்

ரங்கோலி கோலத்தில் நடிகர் அஜித்தின் படம்: புதுச்சேரி ரசிகர் வினோத்தின் முயற்சி

செய்திப்பிரிவு

புதுச்சேரி: பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரியை சேர்ந்த நடிகர் அஜித் குமாரின் ரசிகரான வினோத், ரங்கோலி கோலமாக அஜித்தின் படத்தை தீட்டி அசத்தியுள்ளார்.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் அ.வினோத் இயக்கி உள்ளார். முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் இந்தப் பட வெளியீட்டை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ரங்கோலி கோலத்தில் துணிவு அஜித்தின் உருவப்படத்தை தீட்டி அசத்தியுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் வினோத். மார்கழி மற்றும் பொங்கல் விழாவின் போது வீடுகளில் வண்ணக் கோலம் போடுவது வழக்கம். அந்த வகையில் ரங்கோலி கோலத்தில் அஜித்தின் படம் பார்க்கவே மாஸாக உள்ளது.

இது குறித்து வினோத்திடம் பேசினோம்.. “நான் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். நானே கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்து அதை கற்றுக் கொண்டேன். இப்போது யூடியூப் தளம் மூலமாகவும் படம் வரைவது குறித்த நுணுக்கங்களை கற்றுக் கொண்டு வருகிறேன்.

பல்வேறு படங்களை வரைந்துள்ளேன். இப்போது மார்கழி மற்றும் தைப் பொங்கலை முன்னிட்டு பல்வேறு வீடுகளின் வாசலில் கோலம் வரைவது வழக்கம். அதை பார்த்த போதுதான் அஜித் குமாரின் உருவப்படத்தை கோலமாவு கொண்டு வரையலாம் என்ற யோசனை எனக்கு வந்தது. பொங்கலுக்கு துணிவு படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. நான் அவரது ரசிகன். அதனால் அந்த படத்தின் அஜித் போஸ்டரை வெறும் கோலமாவு மட்டுமே பயன்படுத்தி வரைய முடிவு செய்தேன். கோலமாவு கொண்டு நான் தீட்டியுள்ள முதல் படமும் இதுதான். 10க்கு x 12 அடி என்ற பெரிய சைஸில் இந்தப் படத்தை வரைந்துள்ளேன். இதை சோதனை முயற்சியாக செய்து முடித்தேன். அதில் எனக்கு திருப்தி” என அவர் தெரிவித்துள்ளார். 40 வயதான வினோத், புதுச்சேரி காவல்துறை ஐஆர்பி பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

SCROLL FOR NEXT