சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் நடந்த தூய்மைப் பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளர்களுக்கு புதுப்பானை, பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் சீர்வரிசையை மேயர் ராமச்சந்திரன் வழங்கினார்.
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட 34-வது வார்டில் உள்ள புதுத்தெருவில் தூய்மைப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மேயர் ராமச்சந்திரன் பங்கேற்று, தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதில், பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.
முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ‘எனது குப்பை-எனது பொறுப்பு,’ ‘எனது நகரம் எனது பெருமை’ என்ற திட்டத்தின் கீழ் தூய்மையை வலியுறுத்தி, தூய்மைப் பணியில் மக்களை ஈடுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புகையில்லா போகி, மாசு இல்லா போகியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
மேலும், போகிப் பண்டிகையால் ஏற்படும் புகை மாசுவை தவிர்க்க பழைய பொருட்களை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, வேலு சரவணனின் கடல் பூதம் என்ற தலைப்பில் நாடகம் நடைபெற்றது.
விழாவில் அம்மாப்பேட்டை மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர் ஈசன் இளங்கோ, உதவி ஆணையர் கதிரேசன், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புகையில்லா போகி, மாசு இல்லா போகியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.