குன்னூர்: ஜெகதளாவில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில், ஆயிரக்கணக்கான படுகரின மக்கள் வெண்ணிற ஆடை உடுத்தி பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகரின மக்களின் குல தெய்வம் ஹெத்தையம்மன் திருவிழா, கடந்த 2-ம் தேதி தொடங்கி பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வருகிறது. கோத்தகிரி அருகே பேரகணியில் உள்ள பழமையான ஹெத்தையம்மன் கோயிலில், கடந்த 4-ம் தேதி திருவிழா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான படுகரின மக்கள் பங்கேற்று, ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் ஹெத்தையம்மன் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
ஜெகதளா, காரக்கொரை உட்பட 8 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுகரின மக்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வாக, மக்கள் கைகளில் செங்கோல் ஏந்தி ஊர்வலமாக வந்து ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். வெண்ணிற ஆடை உடுத்தி வந்த படுகர்கள், தங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடி தரிசித்தனர். பின்னர், விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.