மதுரை: எதிர்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழி கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், குடவரைக்கோயில்களை ஆவணப்படுத்தி வருகிறார் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற மதுரை பொறியாளர்.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் பாலமுரளி (வயது 55). மெக்கானிகல் இன்ஜினியரான இவர் தொல்லியலிலும் பட்டயப்படிப்பு படித்துள்ளார். ரஷ்யாவில் மேற்படிப்பை முடித்து 1992-ல் கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள கென்யாவுக்கு பொறியாளர் பணிக்கு சென்றார். பதவி உயர்வு பெற்று நிறுவனத்தில் தலைமைச்செயல் அதிகாரியானார். பின்னர், கரோனா பெருந்தொற்று காலத்தில் விருப்ப ஓய்வு பெற்று 2020-ல் சொந்த ஊரான மதுரைக்கு திரும்பினார்.
விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் முடங்காமல் தமிழிர், தமிழர்களின் பெருமைகளை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழி கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், குடைவரைக்கோயில்கள், கோயில் காடுகள் உள்ள ஊர்களுக்கு பயணித்து ஆவணப்படுத்தி வருகிறார். அதோடு காடுகளுக்கு சென்று கானுயிர் படங்கள் எடுத்தும் ஆவணப்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து மெக்கானிக்கல் இஞ்சினியர் பாலமுரளி கூறும்போது, “கென்யாவில் இரு நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தேன். தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகம். இதுகுறித்து வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழிக்கும், தமிழகம் முழுவதும் பயணித்து தமிழி கல்வெட்டுகள், பல ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள், குடவரை கோயில்கள், கோயில் காடுகள் குறித்து அதிநவீன கேமராக்கள் மூலம் போட்டோக்கள், வீடியோக்கள் எடுத்து ஆவணப்படுத்தி வருகிறேன்.
மேலும், காடுகளுக்கு சென்று கானுயிர் புகைப்படங்கள் எடுத்தும் ஆவணப்படுத்துகிறேன். கென்யா, தான்சானியா, ஜெர்மனியில் புகைப்படக் கண்காட்சியும் நடத்தி, அதில் கிடைத்த வருமானத்தை மதுரையிலுள்ள மனநலம் பாதித்த குழந்தைகள் இல்லத்திற்கு அளித்தேன்.
மேலும், கேனான், நேஷனல் ஜியாக்ரஃபி நடத்திய புகைப்படப் போட்டியில் ஒரு விருது, லண்டன் நிறுவனமான கிரோமேட்டிக் நடத்திய புகைப்படப் போட்டியில் 2 விருதுகள், கென்யா மாத இதழான டிராவல் நடத்திய புகைப்படப் போட்டியில் ஒரு விருதும் பெற்றுள்ளேன்” என்றார்.