ஜெய்சல்மார்: கடந்த 1987-ல் ஒரு கிலோ கோதுமையின் விலை வெறும் ஒரு ரூபாய் 60 பைசா மட்டும்தான் எனச் சொல்லி, அதற்கான ரசீதை ஆதாரமாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான். இது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
அண்மைக் காலமாகவே சமூக வலைதளத்தில் பழைய ரசீதுகள் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலையும் அதிகம் கவனம் பெற்று வருகிறது. நவம்பரில் 1985 உணவக ரசீது, டிசம்பரில் 1986 ராயல் என்ஃபீல்டு புல்லட்டின் விலை குறித்த ரசீது அதற்கு உதாரணம். இப்போது அதே வரிசையில் இணைந்துள்ளது கோதுமையின் விலை குறித்த ரசீது.
“கோதுமையின் விலை கிலோவுக்கு 1.6 ரூபாயாக இருந்த காலம் அது. எனது தாத்தா கோதுமைப் பயிரை 1987-ல் இந்திய உணவுக் கழகத்திற்கு விற்றதற்கான ரசீது இது. பயிர் விற்பனை மேற்கொண்ட அனைத்து ரசீதுகளையும் பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கத்தை அவர் கொண்டவர். இதனை ‘ஜெ’ பார்ம் என சொல்வார்கள். 40 ஆண்டு காலம் பயிர்களை விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் அனைத்தும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்” என அவர் சொல்லியுள்ளார்.
முன்பு கமிஷன் ஏஜெண்டுகள் கைப்பட எழுதி கொடுக்கும் ஜே படிவம். இது தங்கள் விளை பயிர்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் படிவம். இப்போது டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக கோதுமையின் விலை உயர்ந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியா முழுவதும் சில்லறை வர்த்தகத்தில் கிலோவுக்கு ரூ.36.98 என இருந்தது. இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் இது குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.