தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் நேற்று வேட்டி, சேலை அணிந்து பொங்கலிட்ட வெளிநாட்டினர். 
வாழ்வியல்

தமிழர் பாரம்பரியப்படி வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண் பானைகளில் சர்க்கரை பொங்கல் வைத்து, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் ‘ஆட்டோ ரிக்க்ஷா சேலஞ்ச்' என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் 16 வது ஆண்டாக இந்த ஆண்டு சுற்றுலா பயணம் கடந்த 28ம் தேதி சென்னையில் தொடங்கியது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, எஸ்டோனியா, நெதர்லாந்து ஆகிய6 நாடுகளைச் சேர்ந்த 8 பெண்கள்உட்பட 37 பேர் கலந்து கொண்டுள்ளனர். வெளிநாட்டினர் 37 பேரும் 17 அணிகளாக பிரிக்கப்பட்டு 17 ஆட்டோக்களில் புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி வந்தனர்.

வழியில் எட்டயபுரம் பாரதியார் மணி மண்டபம், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.

பொங்கல் கொண்டாட்டம்: நேற்று காலை சாயர்புரம் அருகேயுள்ள தனியார் பண்ணைத் தோட்டத்துக்கு வந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 10 பானைகளில் பொங்கல் வைத்தனர். அவர்களுக்கு பொங்கல் பானை, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் கொடுக்கப்பட்டு, அவர்களே அடுப்பு மூட்டி பொங்கல் வைத்தனர்.

அனைவரும் தமிழ் கலாச்சாரத்துக்கு மாறியிருந்தனர். ஆண்கள் வேட்டி கட்டி தோளில் துண்டு போட்டிருந்தனர். பெண்கள் சேலை கட்டி தமிழ் பெண்களாக மாறியிருந்தனர். பொங்கல் பானை நிரம்பி வழிந்த போது பொங்கலோ, பொங்கல் என கோஷமிட்டதுடன், குலவை சப்தம் கொடுத்து அசத்தினர். பின்னர் தாங்கள் சமைத்த பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.

இந்த கொண்டாட்டத்தை பார்க்க உள்ளூர் மக்கள் அங்கு திரண்டிருந்தனர். தொடர்ந்து மாலையில் ஒரு பிரிவினர் ஆட்டோக்களில் மணப்பாடு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். நேற்றிரவு தூத்துக்குடியில் தங்கிய வெளிநாட்டு சுற்றுலா குழுவினர் இன்று (ஜனவரி 5ம் தேதி) கன்னியாகுமரி புறப்பட்டுச் செல்கின்றனர். நாளை (ஜன.6)திருவனந்தபுரம் செல்லும் அவர்கள், அங்கிருந்து தங்கள் நாடுகளுக்கு விமானம் மூலம் திரும்பு கின்றனர்.

SCROLL FOR NEXT