வாழ்வியல்

“நான் இங்கே ஊழியர்... உங்களின் பணிப்பெண் இல்லை...” - வைரல் வீடியோ உணர்த்துவது என்ன?

செய்திப்பிரிவு

விமானத்தில் இருக்கும் ஃப்ளைட் அட்டன்டென்ட்ஸ் பயணிகளை கனிவாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்றே பயிற்சியளிக்கப்படுகின்றனர். ஆனால், அந்த கனிவுக்கு எல்லை இருக்கிறதா என்ற ஒரு கேள்வியும் எழுகிறதுதானே. பல நேரங்களில் விமான பணிப்பெண்கள் பகிரும் கதைகள் தாங்கள் பொறுத்துக் கொண்ட வேதனைகள், அவமானங்களின் ஆவணமாகவே இருக்கும். ஆனால் இங்கே ஒரு வீடியோவில் ஒரு பணிப்பெண் கனிவுக்கான எல்லை என்னவென்று காட்டியுள்ளார் என்றே நெட்டிசன்கள் அந்த வீடியோவின் கீழ் விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில் பதிவாகியுள்ள காட்சியின்படி விமானப் பயணி ஒருவர் உணவு தொடர்பாக சண்டையிட்டுள்ளார். அப்போது அந்தப் பெண், (மண்டியிட்டபடி பேசுகிறார்) “நீங்கள் போர்டிங் பாஸில் கொடுத்திருக்கும் உணவை தான் நாங்கள் ஆர்டர் செய்ய இயலும். ஆனால், நீங்கள் எங்களிடம் குரலை உயர்த்தி கத்துகிறீர்கள். உங்களால் எங்கள் குழுவினர் முழுவதும் கண்ணீர் வடிக்கின்றனர்” என்று கூறுகிறார். அப்போது அந்த நபர், “நீங்கள் கத்தாதீர்கள்” என்று மீண்டும் கூறுகிறார். அதற்கு அந்தப் பெண், “நானாக கத்தவில்லை சார். நீங்கள் கத்திப் பேசியதால் நான் பதில் சொல்கிறேன். நான் இந்த விமான நிறுவனத்தின் ஊழியர்தானே தவிர, நான் உங்களுக்கு பணிப் பெண் இல்லை சார்” என்று கூறுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வீடியோவிற்கு கீழ் பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஒரு சிலர் பயணிகளிடம் இவ்வளவு கடுமை காட்டக்கூடாது என்றும், இன்னும் சிலர் பயணிகளுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. இதுபோன்ற பயணிகளுக்கு ஒருமுறையேனும் இவ்வாறாக உணர வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT