மதுரை: மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் ‘ஆக் ஷன் எய்ட்’ என்கிற சர்வதேச தன்னார்வ அமைப்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்பு உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவில் சிறந்த தன்னார்வ சமூக செயற்பாட்டாளர்களைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி மனித உரிமை பாதுகாவலர் விருது வழங்குகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பெற தமிழகத்தில் இருந்து மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சுகாதார உரிமை சமூக செயற்பாட்டாளர் ஆனந்த ராஜ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இவருக்கு டெல்லியில் கடந்த 14-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பொதுச் செயலாளர் தேவேந்திர குமார் சிங், தேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் லலிதா குமாரமங்கலம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹா ஆகியோர் மனித உரிமை பாதுகாவலர் விருது வழங்கினர்.
சமூக ஆர்வலர் ஆனந்த ராஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் 5,000-த்துக்கும் மேற்பட்ட மனுக்கள், நூறுக்கும் மேற்பட்ட பொது நல வழக்குகள் மூலம் தனியாருக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தக் காரணமாக இருந்தார் என்பதற்காக இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.