காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள பனங்குடி கிராமத்தில் இந்து, கிறிஸ்தவர்கள் நிதியுதவியோடு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.
கல்லல் அருகேயுள்ளது பனங்குடி கிராமம். இக்கிராமத்தில் 29 சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களது நினைவாக அந்த கிராமத்தில் நினைவுத் தூணும், பூங்காவும் உள்ளது. சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தேசிய விழாக்களில் முன்னோர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் இக்கிராமத்தில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர். பனங்குடி கிராமம் சுதந்திர வேட்கையில் மட்டுமல்ல மத நல்லிணக்கத்துக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. இங்குள்ள 200 ஆண்டுகள் பழமையான முகைதீன் ஆண்டவர் ஜூம்மா பள்ளிவாசல் சிதிலமடைந்திருந்தது.
இதையடுத்து புதிய பள்ளிவாசல் கட்ட முஸ்லிம்கள் முடிவு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள இந்து, கிறிஸ்தவர் நிதியுதவியோடு ரூ.70 லட்சத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டது. நேற்று அந்த பள்ளிவாசல் திறக்கப்பட்டது. இதில் மும்மதத்தினரும் பங்கேற்றனர். இந்துக்கள் சீர்வரிசை தட்டுடன் விழாவுக்குச் சென்றனர். தொடர்ந்து கந்தரி என்ற அன்னதானம் நடைபெற்றது.
இது குறித்து ஜமாத் தலைவர் அப்துல் ரசாக் கூறியதாவது: எங்கள் பள்ளிவாசலுக்கு இடதுபுறம் இந்து கோயில், வலதுபுறமும் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. பள்ளிவாசல் கட்டுவதற்கு இந்து, கிறிஸ்தவர்கள் பொருளுதவி செய்தனர். எங்கள் கிராமம் 200 ஆண்டுகளாகவே சமத்துவபுரமாகவே உள்ளது. ஆண்டுதோறும் நாங்கள் அன்னதானம் நடத்துவோம். இதில் மும்மதத்தினரும் பங்கேற்பர் என்றார்.