திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் தேன் உற்பத்தியில் லாபம் ஈட்டும் சே. இசக்கிமுத்து (24), பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். தேனீக்கள் கொட்டும் என்ற அச்சத்தை நீக்கும் வகையில் தனது முகத்தில் தேனீக்களை பரவவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.
களக்காடு அருகே மலையடிப்புதூர் கிராமத்தை சேர்ந்த சேர்மத்துரை மகன் இசக்கிமுத்து. விவசாயத்தில் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவர், கடந்த 4 ஆண்டுகளாக தேன் உற்பத்தி தொழிலில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். தேனீக்கள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் பட்டயப்படிப்பு முடித்ததும், மதுரையில் நடைபெற்ற 45 நாள் பயிற்சியில் பங்கேற்று தொழிலை நேர்த்தியாக கற்றுக்கொண்டார். தற்போது தனது கிராமத்தில் தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு உறுதுணையாக அவரது தாய், தந்தை, சகோதரி இருக்கின்றனர்.
தேனீக்கள் என்றாலே கொட்டும் என்ற அதீத பயம் மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் இந்த பயத்தை போக்கும் வகையில் முகம் முழுக்க தேனீக்களை பரவவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் காணக்கிடைக்கின்றன.
இலவசமாக பயிற்சி: தேனீக்கள் வளர்ப்பில் ஆண்டொன்றுக்கு பல லட்ச ரூபாய் வருமானத்தை பெற இயலும் என்பதை நிரூபித்துவரும் இசக்கிமுத்து, தேன் உற்பத்தியில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது ஞாயிற்றுக் கிழமைகளில் இலவசமாக பயிற்சி அளிக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்ற 35 பேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
இளம் வயதிலேயே தேன் உற்பத்தி செய்து லாபம் ஈட்டும் இசக்கிமுத்து கூறியதாவது: தேனீக்கள் நம்முடன் இயற்கையாக வளர்ந்து வரும் உயிரினம். தேனீக்கள் என்றால் கொட்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அவற்றை கண்டு பயப்படத் தேவையில்லை. சாதாரணமாக வீட்டில் வளர்க்கலாம். மக்கள் இடையே பயத்தை போக்குவதற்காக முகம் முழுவதும் தேனீக்களை பரவ விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
18 லட்சம் ரூபாய் வருமானம்: வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி நடத்தி வழிகாட்டுகிறேன். தேனீக்கள் விவசாயத்துடன் ஒன்றுபட்டது. தேனீக்களால் 60 சதவீத மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதால் விவசாயம் செழிக்கிறது. காய்கறிகள், பழங்கள் கிடைக்கிறது.
தேனீக்களை வீடுகள் தோறும் வளர்ப்பதற்கான கூண்டுகளையும் விற்பனை செய்கிறேன். ஓராண்டுக்கு 18 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன். தேனீக்கள் வளர்ப்பால் விவசாயம் செழிப்பாகும் என்பதாலும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதாலும் இத்தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன் என்றார்.