பிரதிநிதித்துவப் படம் 
வாழ்வியல்

கரோனா தொற்றால் தாயை இழந்ததால் மருத்துவராக விருப்பம்: 59 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி

இரா.வினோத்

பெங்களூரு: கரோனா தொற்றால் தாயை இழந்த இஸ்ரோ விஞ்ஞானி மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக 59 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து பெங்களூருவைச் சேர்ந்த ராஜன் பாபு (59) கூறியதாவது.

நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் 7-ம் வகுப்புக்கு பிறகு பள்ளி செல்ல முடியவில்லை. சிறு வயதிலேயே நான் கடைகளுக்கு வேலைக்குச் சென்றேன். நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி, தனித் தேர்வராக 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முதல் வகுப்பில் வெற்றி பெற்றேன். பின்னர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன்.

அதன்பிறகு மைக்கோ நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினேன். 1992-ல் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (AMIE) தேர்வில் கூடுதல் பொறியாளராக‌ தேர்ச்சி பெற்றேன். அந்தப் படிப்பு பொறியியல் படிப்புக்கு சமமானதாகக் கருதப்படுவதால் தந்தி அலுவலகத்தில் மின் பொறியாளர் வேலை கிடைத்தது. அதில் வேலை செய்துகொண்டே முதுகலை கணினி அறிவியல் படிப்பை முடித்தேன்.

1995-ல் இஸ்ரோவில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கு 5 ஆண்டுகள் ராக்கெட் விஞ்ஞானியாக பணியாற்றினேன். அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அங்கு சென்றேன். 2007 வரை அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்களில் பணியாற்றினேன்.

2008-ல் பெங்களூரு திரும்பி குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மகனும் மகளும் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா தொற்றால் எனது தாயை இழந்தேன். ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் எனது மடியிலேயே தாயின் உயிர் பிரிந்தது. இதனால் மருத்துவராக வேண்டும் என முடிவெடுத்தேன்.

கடந்த 2 ஆண்டுகளாக உழைத்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்காததால் அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்கவில்லை.

எனவே மீண்டும் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று அரசு இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க விரும்புகிறேன். மருத்துவராகி அதிக பண‌ம் சம்பாதிக்க விரும்பவில்லை. உயிரைக் காக்கும் வகையிலான மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜன் பாபு, 59 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இதுகுறித்து அறிந்த முன்னாள் கல்வி அமைச்சரும், ராஜாஜி நகர் பாஜக எம்எல்ஏவுமான சுரேஷ்குமார் ராஜன்பாபுவின் வீட்டுக்குச் சென்று அவரை பாராட்டினார்.

SCROLL FOR NEXT