உலகக் கோப்பையை முன்னிட்டு புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் 
வாழ்வியல்

FIFA WC 2022 | நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ: புதுச்சேரியில் பேனர் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: கத்தார் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இப்போது இந்தத் தொடரில் குரூப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் கோப்பை வெல்லும் கனவை விரட்டி வருகின்றன. மறுபக்கம் அந்தந்த அணியின் ஆதரவாளர்கள், ரசிகர்கள், அபிமானிகள் என பலரும் தங்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்திய கால்பந்தாட்ட அணி இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடவில்லை. ஆனாலும், இந்திய கால்பந்தாட்ட ரசிகர்கள் தங்கள் அன்பை ‘சின்ன, சின்ன’ செயல்கள் மூலம் வழிகாட்டி வருகின்றனர். வழக்கமாக கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் இருக்கும் கேரளா, கொல்கத்தா, கோவா போன்ற பகுதிகளில் ரசிகர்கள் இந்த கொண்டாட்டங்களில் இணைவார்கள்.

இப்போது அந்தப் பட்டியலில் புது வரவாக இணைந்துள்ளது புதுச்சேரி. முன்னர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்த இன்றைய இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி நகரில் உப்பளம் பகுதியில் கால்பந்தாட்ட உலகின் நிகழ்கால நட்சத்திர வீரர்களான பிரேசிலின் நெய்மர், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே படங்கள் அடங்கிய ஆளுயர பேனர்களை ரசிகர்கள் கட்டி, உலகக் கோப்பை திருவிழாவை உள்ளூரில் இருந்தபடி கொண்டாடி வருகின்றனர்.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள உப்பளம் வாட்டர் டேங்க் அருகே வைக்கப்பட்டுள்ள பேனர்.

இந்த பேனர்கள் புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள உப்பளம் வாட்டர் டேங்க், உப்பளம் பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு அரங்க நுழைவு வாயில் மற்றும் உப்பளம் நேதாஜி நகர் பகுதியில் உள்ள புனித மத்தியாஸ் பள்ளிக்கு அருகிலும் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாடியபோது புதுச்சேரி நகரின் கடற்கரை பகுதியில் பெரிய திரையில் அது நேரலையில் ஒளிபரப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெருவாரியான மக்கள் ஒன்று கூடி அந்த போட்டியில் கண்டு ரசித்தனர். கடந்த முறை பிரான்ஸ் அணிதான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

உப்பளம் நேதாஜி நகரில் வைக்கப்பட்டுள்ள நெய்மர் பேனர்.
SCROLL FOR NEXT