கோப்புப்படம் 
வாழ்வியல்

7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் உணவு சமைக்க நெருப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது: ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

இன்று நமக்கு தேவையான அன்றாட உணவுகளை வெவ்வேறு வகையில் சமைக்கிறோம். எல்பிஜி கேஸ் அடுப்பு, இன்டக்ஷன் குக் டாப், ஓடிஜி, மைக்ரோவேவ் ஆவன் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் நெருப்பு மட்டுமே உணவு சமைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. அது மனித நாகரிகத்தின் முதல்படி என கூட சொல்லப்படுகிறது.

இதுவரையில் சுமார் 1.7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனிதர்கள் நெருப்பை பயன்படுத்தி உணவை சமைத்தது தொடர்பான சான்றுகள் உள்ளன. இந்த நிலையில் சுமார் 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் நெருப்பை சமையலுக்கு பயன்படுத்தி உள்ளதாக ஆய்வறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். அதுவும் இஸ்ரேல் நாட்டில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒன்று கூடி இதனை கண்டறிந்துள்ளனர். இதற்கு அருங்காட்சியகங்கள் சிலவும் உதவி உள்ளன. இது ஆய்வுக் கட்டுரையாக நேச்சர் எக்காலஜி மற்றும் எவலுஷனில் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் நாட்டில் அமைந்துள்ள அகழ்வாராய்ச்சி தளத்தில் சுமார் 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கெண்டை மீன் மாதிரியான மீன் சமைக்கப்பட்டுள்ளது. இதனை அந்த மீனின் எச்சங்களை சான்றாக வைத்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மீன் அந்த தளத்திற்கு அருகே அந்த காலத்தில் அமைந்திருந்த ஏரியில் பிடிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அதனை நெருப்பால் சுட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வெறும் மீன் மட்டும் அல்லாது பல்வேறு இறைச்சி மற்றும் காய்கறிகள் சமைத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT