வாழ்வியல்

3 முறை முயன்றும் இடம் கிட்டாத ஐஐஎம் பெங்களூருவில் உத்வேக உரையாற்றிய இளைஞரின் வெற்றிக் கதை!

செய்திப்பிரிவு

வாழ்க்கை அதன்போக்கில் போய்க்கொண்டிருந்தால் நாம் அத்துடன் இயைந்து பயணிக்க சில நேரத்தில் ஊக்கமும், உத்வேகமும் தேவைப்படுகிறது. அந்த ஊக்கத்தை நாம் நண்பர்களிடமிருந்து பெறலாம், ஒரு ரயில் பயணத்தில் முகம் தெரியாத நபரிடமிருந்து பெறலாம், ஏன் ஒரு சினிமாப் பாடலில் கூடப் பெறலாம். நாம் நதி போல ஓடிக் கொண்டிருக்க நிச்சயம் ஒரு தூண்டுகோல் தேவைப்படத்தான் செய்கிறது.

அப்படியான ஒரு 'ட்ரிகர்' பதிவுதான் இது. வழக்கமான பரபரப்புச் செய்திகளுக்கு மத்தியில் உற்சாகமான ஒரு பகிர்வு. இது சரண் ஹெக்டே என்பவரின் இன்ஸ்டாகிராம் பதிவை அடிப்படையாகக் கொண்டது. வெற்றி என்பது கடின உழைப்பு, விடா முயற்சி, மன உறுதி உள்ளவர்களையே அலங்கரிக்கும். இதற்கு சரண் ஹெக்டே ஒரு சான்று என்பதைக் காட்டுகிறது அவரது இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

“வாய்ப்பு கிடைக்கவில்லையா? அடுத்த முறை அதிர்ஷ்டம் வாய்க்கட்டும். இப்போது எனக்கு 3.3 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். 100-க்கும் அதிகமான பெண் தொழில் முனைவோர் மத்தியில் ஐஐஎம் பெங்களூருவில் சிறப்புப் பேச்சாளராக இருக்கிறேன். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் இதே கல்வி நிறுவனத்தில் சேரும் முயற்சியைக் கைவிட்டேன். இன்று அதே பெங்களூரு ஐஐஎம்மில் நிற்கிறேன். நான் மேடையில் நின்றபோது மைக்கைப் பிடித்திருந்த என் கைகள் வேர்த்திருந்தன. ஆனால், என் முகத்தில் பெரிய புன்னகை இருந்தது. ஏன் தெரியுமா?

ஏனென்றால், ஓராண்டுக்கு முன்புவரை நான் CAT தேர்வு தயாரிப்புக்காக நான் கொடுத்த உழைப்பு அத்தனையும் நேர விரயம் என்று நினைத்திருந்தேன். அது மிகவும் கடினமான பயணம்.

நான் படித்துக் கொண்டே பயிற்சி பணியாளராகவும் இருந்து வந்தேன். அதற்கிடையே தான் தேர்வுகளுக்கு தயாராவேன். பெங்களூரு இந்திரா நகரில் வெறும் 5000 ரூபாய் வருவாயில் வசித்துவந்த காலம் அது. ஐஐஎம் பெங்களூரு நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது. கேட் தேர்வில் 98% பெற்றிருந்தேன். ஆனாலும் நான் ஐஐஎம் பெங்களூருவில் சேர தகுதி பெறவில்லை.

எனது ஈகோ தலைக்கேறியது. படித்தால் ஐஐஎம் அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தாவில் மட்டும்தான் என்று இருந்தேன். ஆனால், இப்போது அது எவ்வளவு முட்டாள்தனமான செயல் என்பதை உணர்கிறேன். அதன்பின்னர் எனது கவனத்தை அமெரிக்க எம்பிஏ கல்லூரிகள் பக்கம் திருப்பினேன். கொலம்பியாவில் ஒரு எம்பிஏ கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால், என்ன நடந்தது தெரியுமா? அங்கிருந்து நான் பாதியிலேயே படிப்பை நிறுத்தினேன். இப்போது உங்கள் முன்னால் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது எனது ஒரு புன்னகைக்கு காரணம் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதே.

இந்தக் கதையின் நன்னெறி ஒன்று இருக்கிறது. அது, என்ன நடந்தாலும் அது நன்மைக்கே. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் நடப்பவற்றை வேறு ஒரு பார்வையில் இருந்து பார்க்க வேண்டும் என்பதை மட்டுமே. அதிலிருந்து சிறந்ததாக எதைப் பெறலாம் என்பதை மட்டுமே. நான் அது கிடைக்கப்பெற்றேன். இப்போது இது உங்களுடைய தருணம். உங்களது கடின உழைப்பு மின்னட்டும்.”

இவ்வாறு அந்தப் பதிவர் கூறியிருக்கிறார். சரண் ஹெக்டேவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT