மதுரை: டீன் ஏஜ் வரை பெற்றோரின் கண்காணிப்பு மிகவும் அவசியம் என மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பி.கீதா ஜீவன் வலியுறுத்தினார்.
மதுரை லேடி டோக் கல்லூரியில் அக் கல்லூரியின் சமூக அறிவியல் துறை, சென்னை யுனிசெப், தமிழக அரசின் சமூக நலத்துறை , மகளிர் உரிமை துறை இணைந்து குழந்தைகள் மற்றும் குழந்தை திருமணத்தை ஒழிக்கும் இளைய வழகாட்டிகளை ஊக்குவிக்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் பங்கேற்று பேசியது: ''தமிழக அரசு மற்றும் யுனிசெஃப் சார்பில், அளிக்கப்படும் பல்வேறு விழிப்புணர்வுகளால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறைகிறது.
உங்களை போன்ற வழிகாட்டிகளும் நண்பர்கள், பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயது பூர்த்தியான பிறகே திருமணம் செய்யவேண்டும். யாருடன் பழகவேண்டும் என்பதில் கவனம் தேவை.
பாலியல் வன்கொடுமையை தடுக்க உதவவேண்டும். யாராக இருந்தாலும் தவறாக பழக விடக்கூடாது. நவம்பர் 28 அன்று தமிழகத்தில் பெரியளவில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான தவறுகளை 1098-ல் தைரியமாக தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் ரகசியம் காக்கப்படுவர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, 181 இலவச உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பிற துறைகளைவிட சமூக அறிவியல் துறை மாணவிகளுக்கு சமுதாய அக்கறை அதிகம் என்றாலும், கூடுதல் அக்கறை உங்களுக்கு தேவை. பெண்கள், சிறுவர், சிறுமியர் செல்போன்களை கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.
ஏமாற்றுவோரிடம் ஏமாந்துவிடக்கூடாது. பெற்றோர், குடும்பச் சூழல், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு செயல்படுங்கள். எதுவாக போக்கிறோம் என்பது தீர்மானித்து, அதற்கேற்ப தங்களை தயார்படுத்துங்கள். கட்டாயம் தினமும் ஒரு செய்திதாள் வாசிக்கவேண்டும். மதிப் பெண் மட்டும் போதாது. போட்டியான உலகில் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் என்ன தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி னாலும், டீன் ஏஜ் வரை பெற்றோரின் கண்காணிப்பும் மிக அவசியம். இது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கஞ்சா, போதைப் பொருட்களுக்கு அடிமையான மாணவர்களை மீட்டெடுக்க முடியும். நீதிபதி, வழக்கறிஞர்கள் போன்று நல்ல எண்ணத்தில் செயல் படவேண்டும்'' என்று அவர் பேசினார்.
யுனிசெஃப்பின் குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் ஜி. குமரேசன், தோழமை இயக்குநர் தேவநேயன் பேசினர். முன்னதாக லேடி டோக் கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் தலைமை வகித்தார். சமூக அறிவியல் உதவி பேராசிரியை தனலட்சுமி வரவேற்றார். டாக்டர் உமா மகேசுவரி நன்றி கூறினார். 250க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியைகள் பங்கேற்றனர்.