அப்பாக்களுடன் இருக்கும் எல்லா நேரங்களிலும் மகள்கள் இளவரசிகளாகளாகி விடுகிறார்கள், தகப்பன்கள் சேவகர்களாக மாறிவிடுகிறார்கள். அதேபோல மகள்களிடம் மட்டும்தான், எல்லா அப்பாக்களும் எள் என்பதற்குள் எண்ணெய் ஆக மாறி, தீயாக வேலை செய்யணும் குமாரு மோடுக்கு சென்று விடுகிறார்கள். அப்பாக்களுக்கும் மகள்களுக்குமான ஆத்மார்த்தமான, அழகான உறவு இன்னும் சரியாக பதிவு செய்யப்பட வில்லை என்ற போதிலும், எல்லா அப்பா - மகள்களுக்கும் அந்த அன்பின் உறவை கவிதைகளாக்கி பரிசளித்துக் கொண்டே இருக்கிறது வாழ்க்கை.
அப்படி ஓர் அன்பின் கவிதை ஒன்று இணையவாசிகளின் இதயங்களைக் கொள்ளை கொண்டு வருகிறது. "ஒர்டிஸ்ஃபேமிலி275" என்ற பயனர், அப்பா மகளின் சேட்டை வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தச் சின்னப்பெண் எல்லோரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள் என்ற வாசகத்துடன் உள்ளது.
பெண்மணி ஒருவர் தனது கணவன் அமர்ந்திருக்கும் அறைக்கு செல்வதிலிருந்து வீடியோ தொடங்குகிறது. அப்பெண்மணி, காலையில் இருந்து அனைத்து கதவுகளையும் அடைத்து வைத்து விட்டு அப்பாவும் மகளும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே ஓர் அறைக்குள் செல்கிறார். அந்த அறையில் மகளின் கட்டில் மீது இரண்டு பொம்மைகள் படுத்துறங்கிக் கொண்டிருக்க, தந்தை மிகவும் தீவிரமாக பொம்மைகளின் துணிகளை அயர்ன் செய்து கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்து வெடித்துச் சிரிக்கும் அந்த பெண்மணி, யார் உங்களை இதை செய்யச்சொன்னது எனக் கேட்கிறார். அதற்கு பக்கத்துக் கட்டிலில் படுத்திருக்கும் மகளைச் சுட்டிக்காட்டி, அவள்தான் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தார் என்கிறார்.
இப்போது கேமரா பக்கத்துக் கட்டிலில் ஒய்யாரமாக படுத்திருக்கும் மகளைக் காட்டுகிறது. அங்கிருந்தபடி தன் தந்தை சரியாக செய்கிறாரா என்று மகள் பூரிப்புடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறாள். போகட்டும் எனக்கு துணி துவைப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று மனைவி கேட்க முதலில் இந்த அயர்னிங் வேலையை முடித்த பின்னர்தான் மற்ற வேலை எல்லாம் என்று தீவிரமாக பதில் கூறி தன் அயர்னிங் வேலையைத் தொடர்கிறார்.
இந்த வீடியோவில் தந்தை அமர்ந்திருக்கும் சேர் மிகவும் கவனிக்கத்தக்கது. அது தனது செல்ல மகளுக்கான மகளுக்கான சின்னச் சேரில் அவர் அமர்ந்து தனது இளவரசிக்காக வேலை செய்துகொண்டிருப்பார்.
வாழ்கையின் மிக அழகிய தருணத்தை அடைகாத்துவைத்திருக்கும் இந்த வீடியோ கடந்த அக்.28-ம் தேதி பகிரப்பட்டு இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த வீடியோவிற்கு பதில் அளித்துள்ள பல பயனர்கள களிப்புக்கான குறியீட்டையே வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பயனர், அருகில் என்னுடைய முதலாளி இருக்கிறார் இப்போது என்னால் எங்கும் வர முடியாது என்று தந்தை சொல்வதாக தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், அந்த சின்னப்பெண் மிகவும் பொறுப்பானவர் என்று தான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மூன்றாவது பயனர், மலர்ந்த புன்னகையுடன் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கும் சிறுமியின் செய்கையில் தெரிகிறது தந்தை அவளுக்காக செய்யும் செயலின் தரம்.
மற்றொரு பயனர் க்யூட் அப்பா... கண்ட்ரோலிங்க் மகள் என்று தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்தாலும் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தானே தெரியும் தனது இளவரசிகளை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொள்ளும் வித்தை.