வாழ்வியல்

“ஓர் அரசு மருத்துவர் தினமும் 300 நோயாளிகளை கவனிக்கணும்!” - தமிழக நிலையைப் பகிரும் மருத்துவர் பெருமாள் பிள்ளை

பால. மோகன்தாஸ்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, அரசு மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் அரசுதான் காரணமாக இருக்கிறது என்கிறார் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை. அவர் அளித்துள்ள விரிவான நேர்காணல்...

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

தமிழகத்தில் 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் இருக்கிறோம். நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமானது ஊதியம். எங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, பிற மாநில அரசு மருத்துவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிக குறைவு. மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் ஊதியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் மிக மிகக் குறைவு. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அரசாணை கடந்த 2009ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை 354 இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இந்த அரசாணையை தற்போதைய திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய கோரிக்கை. அடுத்ததாக, பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு விவகாரத்தில் எத்தகைய முறைகேடுகள் நடக்கின்றன?

ஒரு மருத்துவமனையில் எந்த மருத்துவர் இடம் காலியாக இருக்கிறதோ, அந்த இடத்திற்கு அதே துறையைச் சார்ந்த மருத்துவரை நியமிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மருத்துவமனையில் இ.என்.டி (காது மூக்கு தொண்டை) சிறப்பு மருத்துவர் பணியிடம் காலியானால், அந்த இடத்திற்கு வேறு ஒரு இ.என்.டி சிறப்பு மருத்துவரைத்தான் நியமிக்க வேண்டும். ஆனால், அந்த இடத்திற்கு ஒரு இருதய மருத்துவர் நியமிக்கப்பட்டால் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

தமிழ்நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை, மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கிறதா?

தமிகத்தில் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையோ 19 ஆயிரம்தான். 3 முதல் 4 மடங்கு வரை அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து சொல்லுங்க?

கொரோனா பேரிடர் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தற்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். உயிரை பணயம் வைத்து பணியாற்றவர்களின் தியாகத்தை அரசு உணர மறுக்கிறது.

நோயாளிகளின் உறவினர்களால் மருத்துவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து இருந்து வருகிறது. இவ்விஷயத்தில் அரசு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

அனைத்து அரசு மருத்துவர்களுக்கும், தனியார் மருத்துவர்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரினால் அது நிறைவேற வாய்ப்பு இல்லை. எனவே, நாங்கள் கோருவது, மருத்துவர்களை தாக்குபவர்கள் மீது மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படாத நிலைதான் தற்போதுவரை தொடருகிறது. இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

மருத்துவத் துறைக்கான உள்கட்டமைப்பு தமிழ்நாட்டில் எவ்வாறு இருக்கிறது?

தமிழ்நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு மிக மிக குறைவாக உள்ளது. நாங்கள் வலியுறுத்துவது, இதற்கு மேலும் மருத்துவக் கல்லூரிகளை நீங்கள் திறக்காதீர்கள் என்பதுதான். ஏற்கனவே 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. 1.5 லட்சம் மருத்துவர்கள் இருக்கிறார்கள். 250 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் தமிழ்நாட்டில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இது வளர்ந்த நாடான அமெரிக்காவைவிடவும் அதிகம். எனவே, தடுக்கி விழுந்தால் ஒரு மருத்துவக்கல்லூரி என இருக்கக்கூடாது. அதற்கு மாறாக, உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரியிலும் சிறப்பு மருத்துவர்களுக்கான துறைகளை ஏற்படுத்த வேண்டும். சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இதேபோல், தாலுகா மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசு மருத்துவர்கள் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு உங்கள் பதில் என்ன?

அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. ஆரம்ப சுகாதர நிலையங்களில் 2 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஒரு மருத்துவர் ஒரு நாளைக்கு சுமார் 300 நோயாளிகளை பார்க்க வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல, திடீர் திடீரென அவசர நோயாளிகள் வரும்போது, இதே மருத்துவர்கள்தான் அவர்களையும் பார்க்க வேண்டி உள்ளது. மருத்துவர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டால் இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். அரசுதான் இதை செய்ய வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கு வேலைப் பளு இருக்கிறது என கூறுகிறீர்கள். ஆனால், அதே அரசு மருத்துவர்கள்தான் தனியாக கிளினிக் நடத்துகிறார்கள் அல்லது வேறு தனியார் மருத்துவமனைகளில் பகுதி நேரமாக பணிபுரிகிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?

அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்துவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இது உயிர் காக்கம் பணி. எனவே, தனியாக கிளினிக் நடத்தவோ அல்லது தனியார் மருத்துவமனைகளில் பகுதி நேரமாக பணிபுரியவோ தடை விதிக்கப்பட்டால் அது நோயாளிகளை அதிகம் பாதித்துவிடும். அதேநேரத்தில், அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதும், அவர்கள் இதுபோல் செயல்படுவதற்கு முக்கிய காரணம்.

அரசு மருத்துவமனைகளில் மருந்து - மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு அதிகம் இருப்பதாக வரும் புகார்கள் குறித்து உங்கள் பதில் என்ன?

அரசு மருத்துவமனைகளில் மருந்து - மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். இதற்குத் தீர்வுகாண வேண்டுமாால், அரசே சில குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை தயாரிக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு அவற்றை விநியோகிப்பதோடு, வெளி மாநிலங்களுக்கும் விற்க முடியும்.

அரசாணை 354 அமல்படுத்தப்படுவது தொடர்பாக உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

சென்னையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவகத்தில் வரும் 30ம் தேதி கோரிக்கை மனுவை வைத்துவிட்டு மவுனப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அவர் கொண்டுவந்த அரசாணை நிறைவேற்றப்படாதது குறித்து அவரிடமே முறையிட உள்ளோம்.

SCROLL FOR NEXT