இம்பால்: பருந்து இனங்களில் அமூர் ஃபால்கன் என அழைக்கப்படும் அமூர் பருந்துகள் சிறப்பு வாய்ந்தவை. ஓராண்டில் நீண்ட தூரம் பறக்கும் வகையான இவை ஆப்பிரிக்காவில் அதிகம் வசிக்கின்றன. கண்டம் விட்டு கண்டம் பறந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த வகை பறவைகள் ஓராண்டில் சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பறப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த வகை பறவைகள் மணிப்பூரின் தாமெங்லாங் மாவட்டத்துக்கு வர தொடங்கியுள்ளன. இதுகுறித்து தாமெங்லாங் மாவட்ட வனத்துறை அதிகாரி அமன்தீப் கூறியதாவது: அமூர் பருந்துகள் வழக்கமாக இந்த மாதத்தில்தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும். இந்த ஆண்டில் அக்டோபர் முதல் வாரம் முதலே இவை மணிப்பூருக்கு வரத் தொடங்கிவிட்டன.
இந்த அரிய வகை பறவை இனங்களை பாதுகாப்பது நமது பொறுப்பாகும். எனவே பறவைகளை யாரும் வேட்டையாடாதபடி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுமாறு மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மணிப்பூரில் அடுத்த மாதம் அமூர் பருந்து திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
அக்டோபரில் வரும் இந்த பறவைகள் நவம்பர் இறுதி வரை இங்கு தங்கியிருக்கும். எனவே, பறவை வேட்டையைத் தடுக்க இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் அனைத்து ஏர் கன்களையும் (துப்பாக்கிகள்) கிராம நிர்வாகிகள் வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2018-ல் இந்த பறவைகள் இங்கு வந்த போது டாக்டர் சுரேஷ் குமார் என்பவர் தலைமையில் இந்திய வனவாழ்வு இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த 5 பேர் குழு, பறவைகளுடன் ரேடியோ அலை தொடர்பை ஏற்படுத்தினர். இந்த திட்டத்துக்கு ரேடியோ டேகிங் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த பறவைகள் எவ்வளவு தூரம் ஓராண்டில் பறந்து செல்கின்றன என்பதைக் கண்டறிய முடிந்தது. எந்த நாடுகள் வழியாக இந்த பறவைகள் இடம்பெயர்கின்றன என்ற ஆய்வையும் இந்த குழு செய்தது.
நவம்பருக்குப் பிறகு இந்த பறவைகள் இங்கிருந்து புறப்பட்டு எங்கேயும் நிற்காமல் ஆப்பிரிக்காவுக்குச் செல்கின்றன. அப்போது அங்கு குளிர்கால தட்பவெப்ப நிலை நிலவும். அந்த சீதோஷ்ண நிலைக்காக அவை ஆப்பிரிக்காவுக்கு செல்வதாக பறவையியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் அடுத்த மாதம் அமூர் பருந்து திருவிழா கொண்டாடப்பட உள்ளது.