மதுரை: மதுரை மத்திய சிறைக் கைதிகள் தீபாவளியை முன்னிட்டு தரமான, சுகாதாரமான முறையில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
மதுரை மத்திய சிறை நிர்வாகம் சார்பில் சிறைக் கைதிகள் உற்பத்தி செய்யும் தின்பண்டங்கள், உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வகையில் அங்காடி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றன. சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவில் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன் மேற்பார்வையில் அங்காடி நடத்தப்படுகின்றன. தற்போது தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை சிறைக்கைதிகள் தயார் செய்து சில நாட்களாக விற்பனை செய்து வருகின்றனர். இதில், பாதுஷா, மில்க் பர்பி, மைசூர்பா, ஜிலேபி, லட்டு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்படுகின்றன. விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றன. சிறைத்துறை துணை அலுவலர் தாமரைக்கனி, சிறைத்துறை உதவி அலுவலர் பழனி ஏற்பாட்டில் கைதிகள் இனிப்பு, கார வகைகள் தயாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வழக்கம்போல் சிறைக்கைதிகளால் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.2 லட்சத்தை கடந்து விற்பனை செய்து வருகிறோம். டிஐஜி கலந்தாய்வின்போது டிஐஜி, ஜீனியை தவிர்த்து நாட்டு வெல்லம் மூலம் தயாரித்து விற்பனை செய்ய ஆலோசனை வழங்கினார். அதன்படி வரும் காலங்களில் தயாரிக்கவுள்ளோம். அதேபோல், திருப்பதி லட்டு போல் முந்திரி, ஜாதிக்காய், ஏலக்காய், பச்சை கற்பூரம் சேர்த்து லட்டு தயாரிக்கிறோம். அது மணமும், சுவையுமாக இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.
இனிப்பு ரூ.260, காரம் ரூ.200: தீபாவளி இனிப்பு, காரம் சந்தை விலையைவிட குறைவான விலைக்கு விற்கிறோம். ஒரு கிலோ இனிப்பு ரூ.260-க்கும், காரம் ரூ.200-க்கும் விற்கிறோம். இதில் கிடைக்கும் லாபத்தில் 20 சதவீதத்தை கைதிகளுக்கு வழங்குகிறோம். உணவுப்பொருள் பாதுகாப்புத்துறையின் சான்று பெற்றுள்ளோம். மேலும் மத்திய அரசின் இ-டிரேடு நிறுவனத்தினர் அடுப்படி முதல் அங்காடி வரை ஆய்வு செய்து தரமான, சுகாதாரமான முறையில் தயாரிப்பதாக சான்று வழங்கியுள்ளனர்” என்றார்.
-