லாட்டரி சீட்டுகள் | கோப்புப்படம் 
வாழ்வியல்

கேரளா | கடனை செலுத்த வங்கி நோட்டீஸ் வந்த சில மணி நேரத்தில் லாட்டரியில் ரூ.70 லட்சம் வசமான சம்பவம்

செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் வங்கியில் பெற்ற கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தவருக்கு கெடு தேதி நிர்ணயித்து வங்கியில் இருந்து டிமாண்ட் நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. கையறு நிலையில் இருந்த அவருக்கு அடுத்த சில மணி நேரங்களில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்தது தான் அந்த அதிர்ஷ்ட தகவல்.

அவர் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அக்டோபர் 12 அமைந்தது. அந்த நபரின் பெயர் பூக்குஞ்சு. கேரளாவில் மீன் விற்பனை செய்யும் தொழிலை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் வாங்கியிருந்த அக்‌ஷயா லாட்டரியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

அவருக்கு பகல் 12 மணி அளவில் வங்கியில் இருந்து கடனை செலுத்த சொல்லி நோட்டீஸ் வந்துள்ளது. மதியம் 3 மணி அளவில் லாட்டரி வென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் மீன் விற்பனை செய்து வரும் அவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் 9 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். நிதி சிக்கல் காரணமாக அதனை திரும்ப செலுத்த தவறி உள்ளார்.

“வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்ததும் நாங்கள் விரக்தியில் இருந்தோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கள் சொத்துகளை விற்பதா, அப்படி செய்தால் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது போன்ற கேள்விகள் எங்களுக்குள் இருந்தது.

அப்போது தான் லாட்டரி வென்ற செய்தி வந்தது. அந்த தொகை கைக்கு கிடைத்தும் முதல் வேலையாக வங்கியில் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்த உள்ளோம். என் அப்பா லாட்டரி சீட்டு வாங்குவதற்காக பெற்ற சுமார் 5 லட்ச ரூபாய் கடன் உள்ளது. அதையும் செலுத்த உள்ளோம். பின்னர் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்ய உள்ளோம்” என பூக்குஞ்சு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT