கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா என விவாதம் ஒருபக்கம் இருக்க, முட்டையே இல்லாமல் தனது குழந்தைகளுக்கு ஆம்லெட் போட்டுக் கொடுத்துள்ளார் நடிகை ஜெனிலியா. அது குறித்து தனது சமூக வலைதள பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இன்று உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தச் செய்தி பகிரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உலக அளவில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு முறை பிரபலம் அடைந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சிலர் தாவர வகை உணவு முறைக்கு மாறி வருகின்றனர். இதனை வீகன் டயட் என சொல்வது வழக்கம். அவர்களுக்காக உணவு சார்ந்த தொழில் துறையினர் பிரத்யேகமாக தாவர இறைச்சியை தயாரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்தியாவிலும் இந்த வகை உணவு பழக்கம் கவனம் பெற்று வருகிறது. நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் இந்த வகை உணவு முறையை பின்பற்றி வருகின்றனர். அது குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தாவர உணவில் ஆம்லெட் போட முடியாது என யாரோ சொன்னார்கள்? வெற்றி பெறும் வரையில் முயற்சி செய்யுங்கள்” என அவர் பகிர்ந்துள்ள ஆம்லெட் படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிலியா, குடைமிளகாய், கேரட், வெங்காயம் போன்ற காய்கறிகள் மற்றும் மசாலாவை சேர்த்து சுவையான ஆம்லெட்டை தயாரித்துள்ளார். அதோடு அடுத்த படத்தில் தனது குழந்தைகளுக்கு அதை ருசிக்க கொடுத்துள்ளார். இதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்துள்ளார்.