உயரிழந்த 'ஸூம்'. 
வாழ்வியல்

பயங்கரவாத தாக்குதலில் குண்டடிப்பட்ட 'ஸூம்' நாய் வீரமரணம்: நெட்டிசன்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குண்டடிப்பட்ட ராணுவ சேவையில் இருந்த ‘ஸூம்’ எனும் நாய் இன்று பகல் 12 மணி அளவில் வீரமரணம் அடைந்தது. நெட்டிசன்கள் பலரும் அதன் பணியை போற்றி தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அந்த வீட்டுக்குள் பயங்கரவாதிகளை அடையாளம் காண உதவும் வகையில் சிறப்பு பயிற்சி பெற்ற, ராணுவ சேவையில் உள்ள ‘ஸூம்’ எனும் நாய் அனுப்பப்பட்டது. பயங்கரவாதிகளை அடையாளம் கண்டதும் அது தனது பணியை செய்துள்ளது.

அதை பார்த்ததும் சுதாரித்துக் கொண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்த தாக்குதலில் அது குண்டடிப்பட்டது. அதன் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இருந்தும் தனது வேலையை அது திறம்பட செய்தது.

பின்னர் சிகிச்சைக்காக ஸூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இன்று காலை 11.45 மணி வரையில் மருத்துவ சிகிச்சைக்கு ஸூம் ஒத்துழைத்துள்ளது. அதன் பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதன் உயிர் பிரிந்துள்ளது. இதனை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த நெட்டிசன்கள், சமூக வலைதளம் வழியாக தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றும், அதன் பணியை பாராட்டியும் இந்த இரங்கல் செய்திகள் உள்ளன. #RIPZoom என்பது ட்ரெண்ட் ஆனது.

நெட்டிசன்களின் பதிவுகள் சில..

SCROLL FOR NEXT