குழந்தைகள் முதல் ஒடிசலான தேகவாக்கு கொண்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முட்டை உணவினை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் தருகிறார்கள் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து சத்துணவு நிபுணர்கள்.
அக்டோபர் 14. உலக முட்டை தினம். 1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்குத் தெரியபடுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். முட்டைகள் உட்கொள்வது குறித்து மருத்துவர் டாக்டர் முஹம்மது இப்ராஹிமிடம் பேசினோம்.
“குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு, முட்டை மட்டும்தான். வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் முட்டை சாப்பிடலாம். ஊட்டச்சத்துகள் மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, வைட்டமின்கள் - ஏ, பி 12, பி 2, பி 5, இ முதலியவை, கோலின், சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.
ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டையில் உள்ள லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண்புரை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ள முழுமையான உணவு என்றால் அது முட்டைதான். எனவே நம் அன்றாட உணவில் அதனை தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் முட்டையினை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்? - முட்டை என்றாலே புரதம்தான். பொதுவாக ஒருவரின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஆனால் குழந்தைகளுக்குத் தேவையான புரதம் தாய்ப்பாலிலேயே இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் கட்டாயம் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. மற்றபடி திரவ உணவுகளுடன் குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுக்க வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக அவர்களுக்கு மஞ்சள் கருவை கொடுக்கலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. ஆனால் குழந்தைகள், தினம் ஒரு முட்டை சாப்பிட்டாலும் உடலில் மந்ததன்மை ஏற்படும் என்கிற பயம் தேவையில்லை.
50 வயது மேற்பட்டவர்கள் எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்? - நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சினை. ஆனால், முட்டையில் இருப்பது நல்ல கொழுப்புகள்தான். அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்து இது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாரத்துக்கு 3 முட்டைகளை எடுத்துக்கொள்ளலாம். வயது ஆகிவிட்டதே என்று தவிர்க்க வேண்டிய தேவையில்லை” என்றார்.
சத்துணவு நிபுணர் தாரிணி கிருஷ்ணன், குழந்தைகளுக்கு முட்டை உணவு கொடுக்கும் முறை குறித்து அளித்த விளக்கம்: “ஒரு வயதுக்கு மேல் தான் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க வேண்டும். ஏன் என்றால் நிறைய குழந்தைகளுக்கு தற்போது முட்டை அலர்ஜி வருகிறது. மற்றபடி குழந்தைகளுக்கான முழுமையான உணவு முட்டைதான். ஆனால், அதனை கொடுப்பதற்காக ஒரு வழிமுறை இருக்கிறது.
எடுத்த உடனே முட்டையை வேகவைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு கொஞ்சம் ஜீரணம் ஆக கஷ்டம் ஆகலாம். சில குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாது. அதனால் முட்டையைப் பொறுத்தவரை குழந்தைகள் 1 முட்டை தாராளமாக சாப்பிடலாம். அதனை தினமும் ஓரே மாதிரி அளவில் குழந்தைகளுக்கு கொடுக்காமல் உணவினை கொஞ்சம் மாற்றி விதவிதமாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
முட்டையை முழுமையாக வேக வைக்காமல் அதனை இட்லி சட்டியில் வைத்து கொஞ்சம் ஆஃப்பாயில் போல வேகவைத்து கொடுத்தால் ஜீரணம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
மேலும், இளைஞர்கள் பலர் பச்சையாக முட்டையை குடிக்கிறார்கள். பச்சை முட்டையை அப்படியே சாப்பிடும்போது, புரதம் அவர்கள் உடலில் சேராது. பச்சை முட்டை நியூட்ரிஷியன் பிரகாரம் புரதத்தை கொடுப்பதில்லை. பொதுவாகவே முட்டையினை வேக வைத்தால் மட்டுமே உடலில் புரதம் சேரும், இல்லை என்றால் சேராது.
பொதுவாக புரதச்சத்தில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று கம்ப்ளீட் புரோட்டின். மற்றொன்று இன்கம்ப்ளீட் புரோட்டின். அந்தவகையில் முட்டை ஒரு கம்ப்ளீட் புரோட்டின். அதனால், அதனை நாம் எல்லா வகையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்கிறார் சத்துணவு நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.
அரசு அங்கன்வாடி சத்துணவு மையத்தைச் சேர்ந்த ஊழியர் கலா கூறுகையில், “வாரத்தில் 1 நாள் புதன்கிழமை குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கிறோம். அதுபோக கொஞ்சம் தேக ஒடிசலாக இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு முட்டைகள் கூட கொடுக்கிறோம். அதுபோக மாதம் மாதம் குழந்தைகளின் எடை பார்த்து அவர்களுக்கு தேவையான சத்துணவு மாவு போன்றவற்றை சரியாக எடுக்கிறார்களா என்பனவற்றை அவர்களின் பெற்றோர்களிடம் விசாரித்து அவர்களின் உடல்நலனை உறுதி செய்கிறோம்” என்கிறார்.