சூரத்: இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன் காரணமாக நாடெங்கும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில், குஜராத் நகரில் நேற்று கொண்டாட்டதின்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதனால், கொண்டாட்டம் சில நிமிடங்கள் தடைபட்டுள்ளது. இருந்தும் ஓலா மின்சார ஸ்கூட்டர் கொண்டாட்டத்திற்கு கைகொடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் சூரத் நகரில் நடைபெற்றுள்ளது. இதனை ஷ்ரேயஸ் சர்தேசி ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரங்கோலி கோலத்தை வலம் வந்த படி நடனம் ஆடுகின்றனர். அந்த வீடியோ ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் மற்றும் பேடிஎம் நிறுவனம் விஜய் சேகர் சர்மா ஆகியோரது கவனத்தை பெற்றுள்ளது.
நவராத்திரி கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஓலா எஸ்1 புரோ ஸ்கூட்டரின் முகப்பு விளக்கை ஒளிர செய்துள்ளனர். அதோடு அந்த வாகனத்தில் உள்ள ஸ்பீக்கரை பயன்படுத்தி பாடலை பிளே செய்துள்ளனர். அதனால் தங்களது கொண்டாட்டத்தை தொடர்ந்துள்ளனர். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அதோடு நெட்டிசன்கள் இந்த வீடியோவில் உள்ள கிரியேட்டிவிட்டியை பாராட்டியுள்ளனர்.