டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நாள் ஒன்றுக்கு ரூ.500 வீதம் அறைகள் வாடகைக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே சிறைச்சாலை வாடகைக்கு விடப்படுவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது. அது குறித்த தகவலை பார்ப்போம்.
சில பேர் தங்களது ஜாதகத்தை ஜோசியர்களிடம் காட்டில் அதற்கான பலனை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர். அதில் திருமண தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற என தோஷ நீகக பரிகாரங்களை மேற்கொள்வர். சமயங்களில் சிலர் சிறை செல்ல வேண்டிய சூழல் இருக்கும் என ஜாதகம் பார்ப்பவர்கள் சொல்வது உண்டு. இப்போது அதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் எந்தவித குற்றமும் செய்யாதவர்களை ஒருநாள் சிறைவாசம் அனுபவிக்கும் வசதியை ஏற்படுத்தி தருகிறது உத்தராகண்ட் சிறைச்சாலை.
இந்த ஏற்பாடு அந்த மாநிலத்தில் உள்ள ஹல்ட்வானி சிறைச்சாலையில் தான் கிடைக்க உள்ளது. இது தொடர்பாக அந்த சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் உறுதி செய்துள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்றும். காவல்துறை தலைமையகத்தில் இருந்து இதற்கு அனுமதி கிடைக்க வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.500-க்கு வாடகை விடப்படும் அறைகள் சிறைச்சாலையின் பழைய பிரிவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தோஷத்தை நீக்கி கொள்பவர்கள் மட்டுமல்லாது புதிய அனுபவத்தை பெற எண்ணுபவர்களும் சிறைச்சாலை அறைகளை வாடகைக்கு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.