வாழ்வியல்

நொய்டாவில் ஒரு வயது குழந்தையுடன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பெண்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சன்ச்சல் சர்மா (27) என்ற பெண் சவாலான வாழ்க்கையை எதிர்கொண்டுள்ளார். ஒரு வயது குழந்தையுடன் அவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் செக்டர் 62 முதல் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள செக்டர் 59 வரை ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்போது அவரது தோளுடன் கூடிய தூளியில் அவரது ஒரு வயது ஆண் குழந்தையும் பயணிக்கிறது.

அங்குஷ் என்ற இக்குழந்தை தனது தாய்க்கு எந்த தொல்லையும் தராமல் அழகாக சிரித்தபடி வருவது பயணிகளை வெகுவாக கவர்கிறது. இதனால் கன்ச்சல் ஓட்டும் ஆட்டோ, பயணிகளின் முதலாவது விருப்பமாகி விட்டது.

கணவனை விட்டு பிரிந்து வாழும் சன்ச்சலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று தவணை முறையில் ஆட்டோ கொடுத்துள்ளது. தள்ளு வண்டியில் காய்கறி விற்கும் தாயுடன் சன்ச்சல் வசிக்கிறார். இவரது 3 சகோதரிகளும் திருமணமாகி சுற்றுப்புற இடங்களில் வசிக்கின்றனர்.

சன்ச்சலின் சகோதரர் வேலைக்கு செல்வதால் குழந்தை அங்குஷை கவனிக்க வீட்டில் யாரும் இல்லை. இதற்காக கவலைப்படாத சன்ச்சல் தனது குழந்தையுடனேயே வேலைக்குப் புறப்படுகிறார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சன்ச்சல் கூறும்போது, “எனது மகனின் எதிர்காலத்துக்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். இதில் அன்றாடம் எனக்கு கிடைக்கும் சுமார் ரூ.700-ல் சிறிது தொகையை சேமிக்க முயற்சிக்கிறேன். ஒரு மளிகை கடை வைத்தால் அது நிரந்தரத் தொழிலாக இருக்கும் என்பதால் அதற்காக முயன்று வருகிறேன்” என்றார்.

தேசிய திறந்தவெளிப் பள்ளியில்சன்ச்சல் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். காலையில் தேநீர் அருந்திய பின் ஆட்டோவின் புறப்படும் சன்ச்சல், நண்பகலில் வீடு திரும்புகிறார். குழந்தையை குளிப்பாட்டி உணவூட்டுகிறார். பிறகு மாலை வரை மீண்டும் ஆட்டோ ஓட்டுகிறார்.

ஆணாதிக்கம் கொண்ட இத்தொழிலில் ஒரு தாய்க்கான கடமையை தள்ளிவைக்காமல் அவர் வெல்ல முயற்சிப்பது பலராலும் பாராட்டப்படுகிறது.

SCROLL FOR NEXT