சென்னை: பிரபல வயலின் இசைக் கலைஞர்கள் டாக்டர் எம்.லலிதா, எம்.நந்தினி, இந்துஸ்தானி இசைப் பாடகர் பண்டிட் இமான் தாஸ் இணைந்து ‘ஒரே நாடு, ஒரே இசை’ என்ற நூலை எழுதியுள்ளனர்.
‘ரீ இமேஜினிங் ஒன் நேஷன், ஒன் மியூசிக்’ என்ற தலைப்பில் இவர்கள் எழுதியுள்ள நூல், முதலில் கொல்கத்தாவிலும், சமீபத்தில் பெங்களூருவிலும் வெளியிடப்பட் டது. ஷுபி பப்ளிகேஷன்ஸ் வெளியீடான இந்த நூலை நாட்டின் முக்கிய நகரங்களில் வெளியிட்டு அறிமுகம் செய்யும் முயற்சியில் 3 கலைஞர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நூலாசிரியர்களில் ஒருவரான டாக்டர் லலிதா, நம்மிடம் கூறியதாவது:
தொல்காலம், இடைக்காலம், நவீன காலம் என 3 வகையாக நமது இந்திய இசை பிரிக்கப்படுகிறது. வேதத்திலிருந்து பிறந்தது இசை என்பதை பலரும் நிரூபித்துள்ளனர். தொல்காலத்தை சேர்ந்தது வேதம். இடைக்காலத்தில் முகலாயர் படையெடுப்பின் காரணமாக, அவர்களது இசையும் சேர்ந்து பாரதத்தின் வட பகுதியில் இந்துஸ்தானி இசை என்று உருவானது. இதுவே கர்னாடக இசையாகவும், இந்துஸ்தானி இசையாகவும் பிரிய காரணம் என்று கூறப்படுகிறது.
‘‘இவ்வாறு வடக்கு - தெற்கு என பிரிந்திருக்கும் இசையானது, ஒரே நாடு, ஒரே இசையாக உருவாகும் வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் புத்தகம் எழுதுங்களேன்’’ என்ற யோசனையை எங்கள் மனதில் விதைத்தவர் வங்க எழுத்தாளர் ‘பத்மஸ்ரீ’ உத்பால் கே.பானர்ஜி. இதைத் தொடர்ந்து, இந்துஸ்தானி இசை பற்றி பாடகர் பண்டிட் இமான் தாஸும், கர்னாடக இசை பற்றி நானும் (லலிதா), நந்தினியும் எழுதியுள்ளோம். இதில் புதிய இசை வடிவத்தையும் அளித்திருக் கிறோம்.
36 அட்சரங்கள்
இந்தியாவின் 28 மாநிலங்கள், 8 மத்திய ஆட்சிப் பகுதிகளை குறிக்கும் வகையில், 36 அட்சரங்கள் கொண்டதாக இந்த தாளகதியை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புத்தகத்துடன், ‘ஒரே நாடு, ஒரே இசை’யை விளக்கி புதிய ராக தாள அமைப்பில் உருவாகியுள்ள பாடல் அடங்கிய குறுந்தகடும் வழங்கப்படுகிறது. ‘ஒரே நாடு, ஒரே இசை’ என்ற அடிப்படையிலான பாடல்களை கொண்ட இசை நிகழ்ச்சிகளை வழங்கவும் இமான் தாஸ், டாக்டர் லலிதா, நந்தினி திட்டமிட்டுள்ளனர்.